வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி தேரில் பவனி

வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்.

Update: 2023-03-02 16:56 GMT

தேரோட்டம்

காட்பாடி தாலுகா வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி பிரம்மோற்சவ தேர்த்திருவிழாவை முன்னிட்டு மலைக்குகை கோவில் எதிரே அலங்கரிக்கப்பட்ட கொடி கம்பத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடிக்கம்பத்துக்கு பூஜைகள் செய்து கொடியேற்றினர்.

அன்று முதல் தினமும் பல்வேறு வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அத்துடன் இசை கச்சேரி, நாடகங்கள் எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

நேற்று காலை உற்சவர்களான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு மலை குகைக்கோவிலில் சிறப்பு அபிஷேகம், பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்து, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மலைக்கோவிலில் இருந்து உற்சவர்களை கீழ்இறக்கி சிறப்பு பூஜைகள் செய்து தேரில் எழுந்தருள செய்தனர். வள்ளிமலையைச் சுற்றி நான்கு நாள் தேரோட்டம் நடக்கிறது.

பக்தி கோஷம்

முதல் நாள் சின்னகீசகுப்பம் துண்டு கரை பகுதியிலும், 2-ம் நாள் சோமநாதபுரம் பகுதியிலும், 3-ம் நாள் பெருமாள்குப்பம் பகுதியிலும், 4-ம் நாள் தேர் நிலைக்கு வந்தடைதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

அதில் நேற்று மாலை 5 மணியளவில் முதல் நாள் தேர் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. அதில் திரளான பக்தர்களும் பொதுமக்களும் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். அப்போது வேல்.. வேல்.. வெற்றிவேல், முருகனுக்கு அரோகரா.. கந்தனுக்கு அரோகரா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி தேர் இழுத்தனர்.

விழாவில் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள், கோவில் அதிகாரிகள் இணைந்து பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருவிழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

முதல் நாள் தேரோட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துைற அமைச்சர் ஆர்.காந்தி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்