மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் 200-வது ஆண்டு அவதார நாள் விழா மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. விழாவில் காலை 6 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி ஞானதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், பின்னர் வள்ளலார் அருள்நெறி பரப்புரை திருவருட்பா இன்னிசை நடந்தது. இதனைத் தொடர்ந்து சமரச சுத்த சன்மார்க்க கருத்தரங்கம், சிறப்பு சொற்பொழிவு நடந்தது 10 பேருக்கு சமரச சுத்த சன்மார்க்கர் விருதுகளை கலெக்டர் வழங்கினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளின் இயக்குனர் டாக்டர் ஜெ.ராஜமூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் மெய்யப்பா, மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன், ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி, தருமபுர ஆதீனசுப்ரமணிய தம்பிரான், சட்டநாத தம்பிரான், திருஞான சம்பந்தர் தம்பிரான் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.