வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
சன்னியாசிப்பேட்டை வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 3-ந் தேதி நடக்கிறது.
பண்ருட்டி
பண்ருட்டி அருகே சன்னியாசிப்பேட்டையில் வலம்புரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தது. இப்பணிகள் முடிவடைந்ததையடுத்து வருகிற 2-ந் தேதி யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. பின்னர் கணபதி பூஜை, அங்குரார்ப்பணம், கலாகர்ஷணம், ரக்ஷா பந்தனம், அக்னி பிரதிஷ்டை, முதல் கால யாகசாலை பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.
கும்பாபிஷேக நாளான வருகிற 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, வாஸ்து பூஜை, நாடி சந்தானமும், காலை 8.45 மணியளவில் யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற உள்ளது. தொடர்ந்து 9.15 மணியளவில் வலம்புரி விநாயகர் மற்றும் பாலதண்டாயுதபாணி கோவில் கோபுரத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் முத்துமாரியம்மன், பிடாரி அம்மன், பூரணி பொற்கலை அய்யனாரப்பன் கோவில் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.