திருமலை நாயக்கர் மன்னரை வியக்க வைத்த வலையங்குளம் நாடக குழுவினர்

திருமலை நாயக்கர் மன்னரை வியக்க வைத்த வலையங்குளம் நாடக குழுவினர் குறித்து கல்வெட்டு கண்டறிந்த ெதால்பொருள் ஆய்வாளர் தகவல் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-06-10 20:13 GMT

திருப்பரங்குன்றம், 

திருமலை நாயக்கர் மன்னரை வியக்க வைத்த வலையங்குளம் நாடக குழுவினர் குறித்து கல்வெட்டு கண்டறிந்த ெதால்பொருள் ஆய்வாளர் தகவல் தெரிவித்து உள்ளார்.

ஆய்வு

திருப்பரங்குன்றம் அருகே உள்ள வலையங்குளத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் வேல்முருகன் கொடுத்த தகவலின்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனீஸ்வரன் தலைமையில் மாணவர்கள் அஜித்குமார், தினேஷ்குமார், சூரியபிரகாஷர்மர் ஆகியோர் கொண்ட குழுவினர் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வலையங்குளம் கண்மாய் கரை அருகில் விநாயகர் கோவில் முன்பு திருமலைமெச்சினார் என்ற பெயர் பறைச்சாற்றும் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டை படி எடுத்து ஆய்வு செய்த போது 312 ஆண்டுக்கு முன்பு வெட்டப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

பறைசாற்றும் நாடகம்

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனீஸ்வரன் கூறியதாவது:-

தமிழரின் தொன்மையான கலைகளில் ஒன்று நாடகம். கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் நாடகம் என பெயர் பெற்றது. குறிப்பாக தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் தமிழ் நாடகக்கலை பற்றிய சான்றுகள் உள்ளது. மதுரை நாயக்கர் ஆட்சி காலம். மதுரையை ஆண்ட நாயக்கர்கள் கி.பி 1526 முதல் 1736 வரை நிர்வாகத்திலும் கலாசாரத்திலும் சிறப்பு பெற்று விளங்கினார்கள்.

திருமலை நாயக்கர் ஆட்சி காலம் பொற்காலம். இவர் திருவிழா மற்றும் கலாசாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். குறிப்பாக வலையங்குளம் பகுதியில் திருவிழா காலத்தில் 98 நாட்கள் தொடர்ச்சியாக புராணம் மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் நாடகம் நடைபெறுவது வழக்கம். வலையங்குளத்தை சேர்ந்த நாடகக் குழுவினர் திருப்பரங்குன்றம் கோவில் பெரியரதவீதியில் வீரஅபிமன்யு சுந்தரி நாடகம் நடத்தினார். திருமலைநாயக்கர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்த போது நாடகத்தை பார்த்து மெய்சிலிர்த்து போனார்.

மெச்சினார் பட்டயம்

நாடகக்குழுவினரை அழைத்து பாராட்டி திருமலை மெச்சினார் என்ற சிறப்பு பட்டமாக தன் கையால் செம்பு பட்டயம், 64 உப்பில்லா கட்டிகள் வழங்கினார். மேலும் குதிரையை தன் ஆட்சி பகுதி எல்லையில் ஓட விட்டு அக்குதிரை நிற்குமிடம் வரை நிலத்தில் விளையும் பொருட்களில் ஒரு பங்கு நாடக குழுவினருக்கு தரும்படி கட்டளையிட்டார். அக்குதிரை ஓடிய இடத்தை எல்லையாக குறிக்கப்பட்ட பகுதி தற்போது குதிரை குத்தி என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்