வைகுண்டவாச பெருமாள் கோவில் தேரோட்டம்
விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
விழுப்புரம்
பிரம்மோற்சவ விழா
விழுப்புரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைகுண்டவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் காலையில் திருப்பல்லக்கு உற்சவத்திலும், இரவில் அம்சவாகனம், சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், இந்திர விமானம், குதிரை வாகனங்களில் வைகுண்டவாச பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெற்றது.
தீர்த்தவாரி
இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை 7 மணியளவில் திருத்தேர் மகோற்சவம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் வைகுண்டவாச பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். இந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச்சென்றனர். தேர், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
இதில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மாலையில் திருமஞ்சனம், தீர்த்தவாரி, அவரோஹனம், கடப்ரோக்ஷணம், சாற்றுமுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சூரியநாராயணன், ஆய்வாளர் செல்வராஜ், அர்ச்சகர் வாசு பட்டாச்சாரியார் மற்றும் திருமஞ்சன கைங்கர்யதாரர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.