வைகாசி விசாக திருவிழா:கோட்டை ஈஸ்வரன், திண்டல் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வைகாசி விசாக திருவிழாவையொட்டி கோட்டை ஈஸ்வரன், திண்டல் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது
வைகாசி விசாக திருவிழாவையொட்டி ஈரோடு கோட்டை ஈஸ்வரன், திண்டல் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தீர்த்தவாரி நிகழ்ச்சி
ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரா் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக தேர் திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. விழாவையொட்டி தேரோட்டம் 30-ந் தேதி நடைபெற்றது. ஈஸ்வரன் கோவில் முன்பு தொடங்கிய தேரோட்டம் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, நேதாஜிரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, பெரிய மாரியம்மன் கோவில், காமராஜ் வீதி வழியாக மீண்டும் கோவிலில் நிலை சேர்ந்தது.
இந்தநிலையில் ஆருத்ர கபாலீஸ்வரருக்கு கோவிலின் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. தொடர்ந்து கோவிலில் ஆருத்ர கபாலீஸ்வரருக்கும், வாருணாம்பிகா அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து வாருணாம்பிகா சமேத ஆருத்ர கபாலீஸ்வரரின் திருவீதி உலா நடந்தது.
திருமண தடை நீங்கும்
திண்டல் வேலாயுதசாமி கோவிலில் வைகாசி விசாக விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரத்தொடங்கினர்.
அவர்கள் படிகளின் வழியாக மலை ஏறி கோவிலுக்குள் சென்றனர். கோவிலில் வள்ளி- தெய்வானை சமேத வேலாயுதசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் ஈரோடு ரெயில்வேகாலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக விழாவை யொட்டி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து ஊஞ்சல் உற்சவத்தில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில் திருமண தடை நீங்கக்கோரி வழிபட்ட பக்தர்களுக்கு மலர் மாலை வழங்கப்பட்டது.
ஈரோடு பாப்பாத்திக்காடு முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் வைகாசி விசாக விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.