'அரோகரா' கோஷத்துடன் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்'அரோகரா' கோஷத்துடன் நேற்று தொடங்கியது.

Update: 2022-06-06 16:21 GMT

வைகாசி விசாகம்

தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதரித்த வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள் 'வைகாசி விசாக' திருவிழாவாக அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.

'வசந்த உற்சவம்' என்று வர்ணிக்கப்படும் இத்திருவிழா, பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிறப்பு அலங்காரம்

இதையொட்டி நேற்று முன்தினம் வாஸ்து சாந்திபூஜை, அஸ்திரதேவர் வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை பெரியநாயகி அம்மன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜை, 16 வகை அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி சப்பரத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்து, கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் மண்டபத்தில் வைத்து விநாயகர் பூஜை, கொடிமரம், கொடிபடத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.

'அரோகரா' கோஷம்

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பினர். பின்னர் கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், பொறியாளர் குமார், கண்காணிப்பாளர் அழகர்சாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை தந்த பல்லக்கிலும், இரவில் தங்கமயில், வெள்ளி காமதேனு, யானை, தங்கக்குதிரை போன்ற வாகனத்திலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருவுலா காட்சி நடைபெறுகிறது.

திருக்கல்யாணம்-தேரோட்டம்

6-ம் நாளான 11-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அடுத்த நாள், தேரோட்டம் நடக்கிறது.

விழாவையொட்டி 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாலை 6.30 மணிக்கு மங்கல இசை, பக்தி சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்