வடவள்ளி, துடியலூர் போலீஸ் நிலையங்கள்கோவை மாநகருடன் இணைப்பு

வடவள்ளி, துடியலூர் போலீஸ் நிலையங்கள் கோவை மாநகருடன் இணைக்கப்பட்டன. இதற்கான கோப்புகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் வழங்கினார்.

Update: 2023-08-23 19:00 GMT


கோவை


வடவள்ளி, துடியலூர் போலீஸ் நிலையங்கள் கோவை மாநகருடன் இணைக்கப்பட்டன. இதற்கான கோப்புகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் வழங்கினார்.


வடவள்ளி, துடியலூர்


கோவை மாநகரில் 18 போலீஸ் நிலையங்கள் உள்ளன. தற்போது துடியலூர், வடவள்ளி போலீஸ் நிலையங்கள் கோவை மாநகருடன் இணைக்கப்பட்டது. இதற்கான கோப்புகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் நேற்று வழங்கினார். பின்னர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி துடியலூர் மற்றும் வடவள்ளி போலீஸ் நிலையங்கள் கோவை மாநகர காவல்துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போலீஸ் நிலையங்களில் கூடுதல் போலீசாரை நியமித்து குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


போக்குவரத்து


போக்குவரத்தை சீர்படுத்துவதற்கும் இந்த இணைப்பு உதவியாக இருக்கும். மேலும் குற்றவாளிகள் மாநகரில் ஒரு இடத்தில் குற்றம் செய்து விட்டு வேறு இடத்திற்கு தப்பி செல்லும் சூழல் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த இரு போலீஸ் நிலையங்களும் மாநகர காவல்துறையுடன் இணைக்கப்படும்போது அது போன்ற சுழல் இருக்காது. இந்த போலீஸ் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். துடியலூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பாக பதிவான புகார்கள் மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும், வடவள்ளி பகுதியில் பதிவான பெண்கள், குழந்தைகள் தொடர்பான புகார்கள் மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் பதிவு செய்யப்படும்.


போக்குவரத்து தொடர்பான பணிகளையும் மாநகர காவல்துறை மேற்கொள்ளும். விபத்துகள் தொடர்பான புலன் விசாரணையும் விசாரிக்கப்படும்.


போதை பொருட்கள் தடுப்பு


இந்த போலீஸ் நிலைய பகுதிகளில் கல்லூரிகள் அதிகம் இருப்பதால் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க இந்த பகுதிகளில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும்.


மாநகரில் தற்போது 20 போலீஸ் நிலையங்களாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கோவை மாநகர காவல் எல்லைகள் தொடர்பான புதிய வரைபடம் இன்னும் ஒருவாரத்துக்குள் தயாரிக்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.


நீலாம்பூர் போலீஸ் நிலையம்


மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறும்போது, சூலூர் போலீஸ் நிலையம் இரண்டாக பிரிக்கப்பட்டு நீலாம்பூரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், பெரியநாயக்கன்பாளையம் மகளிர் போலீஸ் நிலையமாக செயல்படும். மாவட்டம் முழுவதும் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இவ்வாறுஅவர் கூறினார்.


நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் சந்தீஷ், சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்