வடலூரில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி: பயிற்சியில் ஈடுபட்ட வீரர் திடீர் சாவு
வடலூரில் மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சியில் ஈடுபட்ட வீரர் திடீரென உயிரிழந்தார்.
வடலூர்,
கடலூர் மாவட்டம் வடலூரில் பிசிகோ பிட்னஸ் சார்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் சேலம் பெரிய கொல்லப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாதையன் மகன் ஹரிஹரன் (வயது 21) என்ற வீரரும் இப்போட்டியில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் ஹரிஹரன் 55 கிலோ பிரிவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
மயங்கி விழுந்தார்
அப்போது பயிற்சியின் இடைவெளியில் அவர் பிரட் சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹரிஹரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து தந்தை மாதையன் கேட்டுகொண்டதன் பேரில் ஹாிஹரன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர் திடீரென உயிரிழந்த சம்பவம் சக வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.