அம்மை, வைரஸ் நோய்களால் பாதிப்பு: கால்நடைகளுக்கான தடுப்பூசிகள் தட்டுப்பாடு

அம்மை, வைரஸ் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

Update: 2022-10-28 20:07 GMT

குறைதீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குநருமான வந்தனா கார்க் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

வேளாண் விரிவாக்க மையம்

அஞ்செட்டியில் வேளாண் விரிவாக்க மையம் தொடங்கிட வேண்டும். சிங்காரப்பேட்டை -பாவக்கல் சாலையில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சிலர் கடை வைத்துள்ளனர். இதனால் விபத்துகள் அதிகளவில் நிகழ்கிறது. இதுகுறித்து புகார் அளித்தும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் மெத்தன போக்கை கடைபிடிக்கின்றனர்.

மாமரங்களில் பராமரிப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மருந்துகள் விற்பனை செய்யும் பெரும்பாலான கடைகளில் விலைப்பட்டியல் பார்வைக்கு வைக்கப்படவில்லை. மேலும், போலி மருந்துகளை விற்பனை செய்கின்றனர். ஏற்கனவே, 2 ஆண்டுகளாக மா விவசாயிகள் இழப்பினை சந்தித்து வருகிறோம். எனவே, தோட்டக்கலை அல்லது வேளாண்மைத்துறை சார்பில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை கடையை அரசு சார்பில் தொடங்கிட வேண்டும்.

தடுப்பூசிகள் தட்டுப்பாடு

மேலும், மாவட்டத்தில் அம்மை மற்றும் வைரஸ் நோய்களால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கான தடுப்பூசிகள் தட்டுப்பாடுகள் அதிகளவில் உள்ளன. போதிய அளவில் தடுப்பூசிகள் கொள்முதல் செய்து, கால்நடைகளுக்கு செலுத்தி, கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

கொப்பரை கொள்முதல் மையங்களில், வியாபாரிகளின் தலையீடு அதிகளவில் உள்ளதால், தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் குடிமேனஅள்ளி ஏரி நிரம்பி வழிந்தோடும் தண்ணீர், அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிகளவில் தேங்கி, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

சாலை அமைக்கும் பணி

இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திட வேண்டும். மலைகிராமங்கள் நிறைந்து காணப்படும் அஞ்செட்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கான மருந்துகள் போதிய அளவில் இருப்பு இல்லை. இதனால் பாம்பு கடித்து பாதிக்கப்படுபவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. ஓசூர் பகுதியில் விவசாய பயிர்களை அழித்து சாலை அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும். அறுவடை முடிந்த பின்பு சாலை அமைக்க வேண்டும்.

வனத்தை ஓட்டி வசிக்கும் விவசாயிகள் யானைகளால் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். எனவே, விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கி, தொடர் பயிற்சிகள் வழங்க வேண்டும். மழைக்காலங்களில் இடி தாக்கி, கிராமபுறங்களில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, கிராமபுறங்களில் இடி தாங்கி அமைக்க வேண்டும்.

தூர்வார வேண்டும்

கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய தொகை வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே தீவன விலை உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பால் கொள்முதல் விலையை அரசு உடனடியாக உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும்.

தொப்படிகுப்பத்தில் இருந்து சந்தூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் உடனடியாக தூர்வார வேண்டும், இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

அதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது:-

தேனீ வளர்ப்புக்கு பயிற்சி

அஞ்செட்டியில் வேளாண் விரிவாக்க மையம் தொடங்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும். நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகள் குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சார்பில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை தொடங்க வழிவகை இல்லை. இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மேலும், உழவர் உற்பத்தியாளர்கள் குழு மூலம் தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நெல் வயலில் சாலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு யானைகளை விரட்டிட 400 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கி, தேனீக்கள் வளர்க்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது 10 சதவீத பேர் கூட தேனீக்கள் வளர்க்கவில்லை. மீண்டும் விவசாயிகளுக்கு தேனீக்கள் வளர்ப்பு குறித்து தொடர் பயிற்சியும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்