மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்-மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்குகிறது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோமாரி நோய் தடுப்பூசி
தர்மபுரி மாவட்டத்தில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 871 பசு மற்றும் எருமைகள் உள்ளன. இவற்றில் 4 மாதத்திற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 3 லட்சத்து 46 ஆயிரத்து 500 டோஸ்கள் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி (புதன்கிழமை) முதல் 21-ந் தேதி வரை 3 வார காலத்திற்கு சிறப்பு முகாம்கள் மூலமாக கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது. இந்த முகாம்கள் மூலமாக மாவட்டத்தில் உள்ள 4 மாதத்திற்கு மேற்பட்ட அனைத்து பசு, எருமை மாடுகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
பயன் பெறலாம்
விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடத்தப்படும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையம் மற்றும் கால்நடைமருத்துவ மனையைஅணுகலாம்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கால்நடை வளர்போர் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி தங்களுடைய கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.