கீழப்பழுவூர்:
தேசிய கால்நடை நோய்கள் தடுப்பு திட்டத்தின் கீழ் கன்று வீச்சு நோய்க்கான தடுப்பூசி முகாம் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த நோயானது மாடுகளிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவக்கூடியதாகும். இந்த நோய் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் கருத்தரித்தலில் பிரச்சினை ஏற்படக்கூடும். எனவே ஆரம்பம் முதலே கன்றுக்குட்டிகளுக்கு தடுப்பூசி அளித்து, இந்த நோயை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து இடங்களிலும் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 7 மாதங்களுக்கு உட்பட்ட கன்றுக்குட்டிகளுக்கு கன்று வீச்சு நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது. இம்முகாமில் கால்நடை உதவி மருத்துவர் மணிகண்டன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் நசீமா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கன்றுக்குட்டிகளை பரிசோதனை செய்து தடுப்பூசிகளை செலுத்தினர்.