1,934 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தர்மபுரி மாவட்டம் முழுவதும் 1,934 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு வீடு தேடி சென்று ஊசி செலுத்தப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் முழுவதும் 1,934 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு வீடு தேடி சென்று ஊசி செலுத்தப்பட்டது.
தடுப்பூசி முகாம்
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெற்றது. தற்போது தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல்கட்டமாக பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் சமூக இடைவெளியுடன் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பயன்பெறும் வகையில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று 1,934 இடங்களில் 35-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. மேலும் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிலும் முகாம்கள் நடைபெற்றன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
வீடு தேடி சென்று ஊசி
இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் இதுவரை பூஸ்டர் ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களின் வீடு தேடி சென்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று பெரியாம்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் தென்னை தொழிலாளர்களுக்கு சுகாதார துறை அலுவலகம் முன்னிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதேபோன்று மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களையும் வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. தர்மபுரி மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,934 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 22,883 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.