2,084 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தர்மபுரி மாவட்டத்தில் 2,084 சிறப்பு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
தர்மபுரி மாவட்டத்தில் 2,084 சிறப்பு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
இது தொடர்பாக கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தடுப்பூசி முகாம்
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 2,084 இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கு சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுபட்ட முன் களப்பணியாளர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் 12 முதல் 18 வயது வரையுள்ள மாணவ, மாணவிகள் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதேபோல் 5.1.2022- க்கு முன் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் அனைவரும் தவறாது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ரூ.500 அபராதம்
தர்மபுரி மாவட்டத்தில் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வருவோருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்படும். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் முடிவு வரும் வரை தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.