புதிய, பழைய ஆயக்கட்டு பகுதி பாசனத்துக்காகவாணியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு10,517 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்

Update: 2023-02-16 19:00 GMT

பாப்பிரெட்டிபட்டி:

புதிய, பழைய ஆயக்கட்டு பகுதி பாசனத்துக்காக வாணியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 10,517 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

வாணியாறு அணை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு அணையில் இருந்து 2022-2023-ம் ஆண்டுக்கான புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. அரூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) ராஜசேகரன் தலைமை தாங்கி தண்ணீரை திறந்து வைத்தார்.

அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் 4 நனைப்புக்கு 55 நாட்களும், நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 325.84 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மீதமுள்ள தண்ணீரை பழைய ஆயக்கட்டு நேரடி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட அரசாணை வெளியிடப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாசன வசதி

இதன்மூலம் சுமார் 10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். இடதுபுற கால்வாய் மூலம் மோளையானூர், கோழிமேக்கானூர், பாப்பிரெட்டிப்பட்டி, அலமேலுபுரம், ஆலாபுரம், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகள் பாசன வசதி பெறும்.

பழைய ஆயக்கட்டு கால்வாய் மூலம் வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், ஒந்தியாம்பட்டி, தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி, சின்னாங்குப்பம் ஆகிய கிராமங்களும் பாசன வசதி பெறும். இந்த பகுதிக்குட்பட்ட விவசாயிகள் பொதுப்பணித் துறையினருடன் ஒத்துழைத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயனடைய வேண்டும் என பொதுப்பணி துறையினர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி பொறியாளர் கிருபா, தாசில்தார் சுப்பிரமணி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் டாக்டர் பழனிசாமி, மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்