முயல் வேட்டைக்கு பயன்படுத்திய 5 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின; 4 பேர் கைது
சிவகிரி அருகே முயல் வேட்டைக்கு பயன்படுத்திய 5 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின. இதுதொடர்பாக 4 பேரை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.
சிவகிரி:
சிவகிரி அருகே முயல் வேட்டைக்கு பயன்படுத்திய 5 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின. இதுதொடர்பாக 4 பேரை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.
ரோந்து பணி
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தென்மலை பஞ்சாயத்து செந்தட்டியாபுரம் புதூர், அருகன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் முயல் வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், உதவி வன பாதுகாவலர் ஷாநவாஸ்கான் தலைமையில், சிவகிரி வனச்சரக அலுவலர் மவுனிகா, வனவர் அசோக்குமார் வனகாவலர்கள் கண்ணன், சுதாகர், பெருமாள், செய்யது, பாவாஷா, சசிகுமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கண்மாயில் முயல் வேட்டை
அப்போது தேவிபட்டணம் பீட் எல்கைக்கு உட்பட்ட செந்திட்டியாபுரம் புதூர் முள்துருத்தி கண்மாய் பகுதியில் முயல் வேட்டையாடிய சிலர் வனத்துறையினரைக் கண்டதும் தப்பி ஓடினர். உடனே அவர்களை விரட்டிச் சென்று சுற்றி வளைத்து வனத்துறையினர் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், சிவகிரி தாலுகா இனாம் கோவில்பட்டி மேல தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் சுந்தர்ராஜ் (வயது 42), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா அருள்புத்தூர் பஞ்சாயத்து கிறிஸ்துராஜபுரம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த அற்புதம் (56), இன்னாசி மகன் சிம்சோன் வயது (22), ராஜபாளையம் தாலுகா அயன் கொல்லங்கொண்டான் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் கதிர் (22) என்பது தெரியவந்தது.
4 பேர் கைது
மேலும், அவர்கள் வேட்டைக்கு பயன்படுத்திய 5 நாட்டு வெடிகுண்டுகளும் சிக்கின.
இவர்கள் வனப்பகுதிகளில் வேட்டைக்கு சென்றபோது, முயல்களை விரட்டிச் சென்று நாட்டு வெடிகுண்டு வீசி பிடித்துள்ளனர். நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் காயமடைந்து அதிர்ச்சியில் மயங்கிய முயல்களை பிடித்தது தெரியவந்தது.
இதையடுத்து சுந்தர்ராஜ் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்த 5 நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள் மற்றும் வேட்டையாடிய முயல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான சுந்தர்ராஜ் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.