உளுந்து பயிரில் கூடுதல் மகசூல் பெற விதைகளின் தரத்தை பரிசோதித்து பயன்படுத்துங்கள்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்து பயிரில் கூடுதல் மகசூல் பெற உளுந்து விதைகளின் தரத்தை பரிசோதித்து பயன்படுத்த வேண்டும் என்று விதை பரிசோதனை வேளாண் அலுவலர் சந்தோஷ்குமார் அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-10-29 18:45 GMT

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள், தமிழ்நாடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையினரால் சான்றளிக்கப்பட்ட சான்று அட்டை பொருத்திய விதைகளை பயன்படுத்த வேண்டும். விவசாயிகள், தாங்கள் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள உளுந்து விதைகள் அல்லது விற்பனையாளர்களிடமிருந்து பெறப்பட்ட உளுந்து விதைகளின் ஈரப்பதம் பருவமழை காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஈரப்பதம் ஒரு சதவீதம் அதிகரித்தாலும் ஆயுள் இருமடங்காக குறைந்துவிடும். மேலும் பூஞ்சான் அல்லது பூச்சி பாதிப்புக்குள்ளாகி குறைந்தபட்ச முளைப்புத்திறன் தரத்திலிருந்து பின்தங்கி இருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் தங்களிடமுள்ள விதைகளின் முளைப்புத்திறன், ஈரப்பதம் ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்து விதைப்பதால் இனிவரும் காலங்களில் ஏற்படும் பயிர் இழப்பினை தடுக்கலாம்.

விதைப்பரிசோதனை

விவசாயிகள், தாங்கள் சேமித்து வைத்துள்ள விதைகளின் புறத்தூய்மை அறிந்து விதைக்க வேண்டும். புறத்தூய்மை குறைவாக உள்ள விதைகளில் களை விதைகள் கலப்புகள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. மழைக்காலங்களில் களை விதைகள் அதிகமாகவும், விரைவாகவும் வளர்ந்து பயிருக்கு இழைக்கும் பேரழிவுகளை விவசாயிகள் நன்கு அறிவர். அந்த பேரழிவுகளை தவிர்க்க புறத்தூய்மை அறிந்து விதைப்பது சாலச்சிறந்தது.

உளுந்து விதைகளின் அனைத்து பகுப்பாய்வு முடிவுகளை அறிய விவசாயிகள், தாங்கள் வைத்துள்ள விதை குவியலில் இருந்து ஒரு கிலோ உளுந்து விதைகளை எடுத்து துணிப்பைகளில் இட்டு, விதை மாதிரியினுள் பயிர், ரகம், குவியல் எண் போன்ற விவரங்களை கொண்ட சீட்டினை வைத்து விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் இயங்கி வரும் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தின் முதல் தளத்தில் செயல்படும் விதைப்பரிசோதனை நிலையத்தில் கொடுத்து ரூ.30 பரிசோதனை கட்டணம் செலுத்தி பகுப்பாய்வு முடிவுகளை தெரிந்து அதன் அடிப்படையில் உளுந்து விதைகளை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் கூடுதல் மகசூல் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்