பிளாஸ்டிக் பாலீத்தின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பாலீத்தின் பைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் அரசின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

Update: 2023-05-09 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பாலீத்தின் பைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் அரசின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தடை

மத்திய, மாநில அரசுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க அரசுத்துறை அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் மேற்கொண்ட முயற்சிகள் வீணாகி வருகின்றன. பிளாஸ்டிக் பயன்பாடு என்பது பெருமளவில் ஊடுருவி விட்ட நிலையில் அதனை தவிர்ப்பது என்பது இயலாத காரியமாகவே உள்ளது. அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க தயங்குவதால் மக்களிடம் அச்சமின்றி சர்வ சாதாரணமாக பயன்பாடு அதிகரித்து வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகள் மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து வாங்கி வரும் நிலையில் மட்காத குப்பையை பயன்படுத்தக்கூடாது என்பதில் கடுமையான முறையை பின்பற்றவில்லை. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டிய அதிகாரிகளும் ஆய்வு நாட்களில் பெயரளவில் சில கடைகளுக்கு சென்று ஒரு சில பிளாஸ்டிக் பைகளை மட்டும் பறிமுதல் செய்துவிட்டு சென்று விடுகின்றனர்.

ஆனால், இன்றளவும் பிளாஸ்டிக் பயன்பாடு அனைத்து கடைகளிலும் சர்வ சாதாரணமாக வெளிப்படையாகவே பயன்படுத்தப்படுகிறது. கடந்த காலங்களில் இருந்த துணிப்பை கொண்டுவந்தால்தான் பொருட்கள் என்ற நிலை தற்போது எங்கும் இல்லை.

அனுமதி ரத்து

அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் சில கடைகளுக்கு சென்று பைகளை பறிமுதல் செய்து வந்தாலும், பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சர்வசாதாரணமாக திறந்து உற்பத்தி செய்து வருகின்றன. ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் பாலீத்தின் பயன்பாட்டை போல அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் பல பகுதிகளில் வெளிப்படையாக திறந்து உற்பத்தி செய்து வருகின்றன. அதனை தடுக்க அதிகாரிகள் ஏன் தயங்குகின்றனர் என்பது புரியதாக புதிராக உள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பை, பாக்கு மட்டை பை ஆகியவற்றை பயன்படுத்த மக்களை அறிவுறுத்தி பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டினை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து சுகாதார பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்க சோதனை நடத்தி வருகிறோம். அதில் பாலித்தீன் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதித்த கடைகளில் மீண்டும், மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்துவது தெரியவந்தால் அந்த கடைகளின் அனுமதி ரத்து செய்யப்படும்.

கடும் நடவடிக்கை தேவை

பாலித்தீன் பொருட்கள் பயன்பாட்டால் அவை நிலத்தில் புதைந்து நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகிறது. மேலும் கால்நடைகள் பிளாஸ்டிக் பொருட்களை உண்பதால் அவை உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

கழிவு நீர் கால்வாயில் பிளாஸ்டிக் பொருட்கள் போடப்படுவதால் அடைப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் அரசு அறிவுறுத்தியபடி பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க, நிலத்தடி நீரை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.

பிளாஸ்டிக் பாலீத்தின் பொருட்கள் மீது தடைவிதித்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கையில் எடுத்து அரசு போராடி வரும் நிலையில் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு மற்றும் அவற்றின் சட்ட விரோதமான உற்பத்தி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. இதனை அதிகாரிகள் தடுத்து கடும் நடவடிக்கை எடுத்தால்மட்டுமே அரசின் திட்டம் வெற்றி பெறும். 

Tags:    

மேலும் செய்திகள்