யூரியா உரம் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்; குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
நெல்லை மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, வேளாண்மை இணை இயக்குனர் டேவிட் டென்னிசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
யூரியா உரம் தட்டுப்பாடு
அப்போது அவர்கள் பேசுகையில், ''தனியார் உரக்கடைகளில் உரங்களின் விலை பட்டியல் வைப்பதில்லை'' என்றனர். இதற்கு கலெக்டர் விஷ்ணு, "கடைகளை குறிப்பிட்டு சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் பேசுகையில், "திருக்குறுங்குடி, ஏர்வாடி பகுதிகளுக்கு போதுமான யூரியா மூட்டைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தனியார் உரக்கடைகளில் டி.ஏ.பி. வாங்கினால்தான் யூரியா தருவோம்" என கட்டாயப்படுத்துகின்றனர் என்றார்.
கலெக்டர், "கடந்த முறை இந்த பிரச்சினை ஏற்பட்ட போது தூத்துக்குடியில் இருந்து யூரியா ஒதுக்கீடு பெற்றோம். தற்போதும் யூரியா தட்டுப்பாடு போக்கப்படும்"் என்றார்.
குளங்களின் மடைகள்
நாங்குநேரி பகுதி விவசாயிகள் பேசுகையில், "வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்னதாக குளங்களின் மடைகளை சீரமைக்க வேண்டும். அப்போதுதான் பிசான பருவத்துக்கு தண்ணீரை சரியாக பயன்படுத்த முடியும்" என்றனர்.
தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் 1 மூட்டைக்கு ரூ.40 வசூலிக்கிறார்கள். அங்கு மூட்டை தூக்குபவர்களுக்கு கூலி கொடுப்பதில்லை. மூட்டைகளை எடுத்து செல்லும் லாரிகளுக்கு குறைந்த வாடகை தருகிறார்கள். எனவே பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்" என்றனர்.
இதற்கு கலெக்டர் பேசுகையில், "நெல் கொள்முதலில் பணம் வசூலிப்பது குறித்து ஏற்கனவே பலமுறை எச்சரிக்கப்பட்டு உள்ளது. இனிமேல் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதேபோல் பல்வேறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள்.
கலந்துகொண்டவர்கள்
கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குனர் சுந்தர் டேனியல் பாலஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பையா, தோட்டக்கலை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.