கடலூர் புதுவண்டிப்பாளையத்தில்அப்பர் கரையேறிய ஐதீக நிகழ்ச்சிதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கடலூர் புதுவண்டிப்பாளையத்தில் அப்பர் கரையேறிய ஐதீக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-05-07 18:45 GMT

அப்பர் கரையேறிய இடம்

சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட மகேந்திரவர்ம பல்லவ மன்னன், சமண சமயவாதிகளின் தூண்டுதலால் சைவ சமயத்திற்கு மாறிய திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை சித்ரவதை செய்தார். பின்னர் அப்பரை கொல்லாமல் விடக்கூடாது என்று கருங்கல்லில் கட்டி கடலில் வீசினார்.

அப்போது 'சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை' எனத்தொடங்கும் நமச்சிவாய பதிகம் பாடி, அந்த கல்லையே தெப்பமாக கொண்டு அப்பர் கரை சேர்ந்ததாக வரலாறு கூறுகிறது. அதன் பிறகு பல்லவ மன்னனும் சைவ சமயத்தை பின்பற்ற தொடங்கினார். இதில் அப்பர் கரையேறிய இடம் தான் தற்போது புதுவண்டிப்பாளையத்தில் உள்ள கரையேறவிட்டகுப்பம் என்று அழைக்கப்படுகிறது. அப்பர் கரையேறிய இடத்தில் அவருக்கு தனியாக கோவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடந்து வருகிறது.

ஐதீக நிகழ்ச்சி

அதன்படி இந்த ஆண்டிற்கான வரலாற்று ஐதீக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி 8 மணி அளவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் இருந்து விநாயகர், அப்பர், பெரியநாயகி உடன் பாடலீஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தேரடி தெரு, வண்டிப்பாளையம் மெயின்ரோடு வழியாக கரையேறவிட்டகுப்பத்திற்கு வந்தார். அப்போது பாடலீஸ்வரருக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் கைலாய வாத்தியங்கள் இசைக்க பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதையடுத்து அங்குள்ள குளத்திற்கு அருகில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுடன் எழுந்தருளினார். அதன்பிறகு அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் அப்பர் தெப்பத்தில் 9 முறை வலம் வந்து, கரையேறி அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜை

தொடர்ந்து அப்பருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அதையடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று வாகீசர் மண்டகப்படியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பிறகு பாடலீஸ்வரர், பெரியநாயகி, விநாயகர் சாமிகள், அப்பருடன் திருப்பாதிரிப்புலியூர் கோவிலை சென்றடைந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்