மேல்பாதி கோவில் பிரச்சினை:இரு தரப்பினரும் 7-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்கோட்டாட்சியர் உத்தரவு
மேல்பாதி கோவில் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரும் 7-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபாடு செய்வது தொடர்பாக கடந்த 7.4.2023 அன்று இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக விழுப்புரம் கோட்டாட்சியரால் 8.4.2023, 11.4.2023, 13.4.2023 ஆகிய நாட்களிலும், மாவட்ட கலெக்டரால் 20.5.2023, 24.5.2023 ஆகிய நாட்களிலும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டங்கள் நடத்தப்பட்டது. இருப்பினும் சுமூக முடிவுகள் எட்டப்படவில்லை.
இதனை தொடர்ந்து மீண்டும் 25.5.2023 அன்று கோட்டாட்சியர் தலைமையிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையிலும் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியாக 26.5.2023 அன்று கோட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து அமைதிக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆனாலும் கடைசிகட்ட பேச்சுவார்த்தையிலும் எவ்வித சுமூக முடிவும் ஏற்படவில்லை.
சீல் வைப்பு
இதையடுத்து சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்கும் வகையிலும், பொது அமைதியை நிலைநாட்டும் வகையிலும் அக்கோவிலுக்குள் இரு தரப்பினரும், அவர்களை சார்ந்தவர்களும் செல்லக்கூடாது என்றுகூறி கடந்த 7.6.2023 அன்று கோட்டாட்சியரால் அக்கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இரு தரப்பினரையும் தங்கள் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்ய விசாரணைக்கு அழைக்கப்பட்டது. அதன்பேரில் கடந்த மாதம் 9-ந் தேதியன்று இரு தரப்பினரும், விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்ததோடு எழுத்துப்பூர்வமாக விளக்கத்தையும் சமர்பித்தனர்.
விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
இந்நிலையில் இரு தரப்பினருக்கும் விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி நோட்டீசு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மேல்பாதி கோவில் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரிடமும் மீண்டும் விசாரணை செய்யப்பட வேண்டியுள்ளதால் வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி தங்கள் தரப்பு எழுத்துப்பூர்வமான விளக்கத்தை உரிய ஆவணங்களுடன் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் வக்கீலின் உதவியை நாடிக்கொள்ளலாம்.
மேலும் நியாயமான முகாந்திரம் இல்லாமல் அன்றைய தினம் நீங்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தாலோ அல்லது மறுத்தாலோ நீங்கள் ஆஜராகுவதை கட்டாயப்படுத்த பிடிக்கட்டளை ஒன்று பிறப்பிக்கப்படும் என்று இதன் மூலம் எச்சரிக்கை செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.