விஸ்வநாதர் கோவிலில் அப்பர் குருபூஜை

தா.பழூரில் விஸ்வநாதர் கோவிலில் அப்பர் குருபூஜை நடைபெற்றது.

Update: 2023-05-14 18:45 GMT

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவருமான திருநாவுக்கரசர், அப்பர் பெருமான் என்று அழைக்கப்படுகிறார். அப்பர் பெருமான் இறைவன் திருவடி சேர்ந்த நாளை நினைவு கூரும் வகையில் அவரது குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று நடைபெறுவது வழக்கம். அதன்படி அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் அப்பர் பெருமான் குருபூஜை நடைபெற்றது. குருபூஜையையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், சமயக்குரவர்களான சுந்தரர், அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகருக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவிய பொடி, நெல்லி முள்ளி பொடி, வில்வ பொடி, அருகம்புல் பொடி, தேன், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி, அம்பாள், சமயக்குரவர்கள் நால்வர் ஆகியோர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தனர். மங்கள தீபம் நடைபெற்றது. ஓதுவார்கள் அப்பர் பெருமான் இயற்றிய தேவாரப்பாடல்களை பாடி வழிபட்டனர். வேத மந்திரங்கள் முழங்க, பஞ்ச புராணம் பாராயணம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. உழவாரத் தொண்டு செய்த அப்பர் பெருமானுக்கு இறைவன் கட்டமுது வழங்கிய நிகழ்வை நினைவு கூரும் வகையில் அடியார்களுக்கு தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்