தியாகதுருகம் அருகே 18 நாட்களுக்கு மேலாக நேரடி கொள்முதல் நிலையத்தில் எடைபோடாமல் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்; மழை நீடிப்பதால் நஷ்டம் ஏற்படுமென விவசாயிகள் கவலை

தியாகதுருகம் அருகே 18 நாட்களுக்கு மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடைபோடாமல் நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கிறது. இதனிடையே தற்போது மழை நீடிப்பதால், நஷ்டம் ஏற்படுமென விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2023-06-18 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே கூத்தக்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி முதல் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தனர்.

இதில், கடந்த மே மாதம் 31-ந்தேதி வரை மட்டுமே விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகள் எடைபோடப்பட்டு, எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர், நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

சாலை மறியல் போராட்டம்

இருப்பினும் கடந்த 1-ந்தேதிக்கு பிறகும் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக இந்த கொள்முதல் நிலையத்துக்கு எடுத்து வந்தனர். அந்த வகையில் இதுவரைக்கும் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட மூட்டைகளை விற்பனை செய்வதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு எடுத்து வந்து, ஆங்காங்கே குவியல் குவியலாக மூட்டைகளை அடுக்கி குவித்து வைத்துள்ளனர். இதற்கிடையே நெல் கொள்முதல் செய்யப்பாடததை கண்டித்து, கண்டித்து கடந்த 15-ந்தேதி கூத்தக்குடி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மழையால் கவலை

இதனிடையே கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில், நேற்று முதல் மழை பெய்து வருவதால், விவசாயிகளை மேலும் கவலையடைய செய்துள்ளது. மழை அதிகரித்தால், மூட்டைகள் நனைந்து சேதமாகி, பெரும் நஷ்டத்துக்கு வழிவகுக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

எனவே விவசாயிகள் நலன் கருதி, அவர்கள் எடுத்து வந்திருக்கும் நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடை போட மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்