துப்புதுலங்காத கொலை, கொள்ளை வழக்குகள்

துப்புதுலங்காத கொலை, கொள்ளை வழக்குகள் திண்டுக்கல் மாவட்ட போலீசாரை திணறடித்து வருகின்றன.

Update: 2023-02-04 19:00 GMT


எல்லையில் ராணுவ வீரர்கள் இரவு, பகல் பாராமல் கண்விழித்து நாட்டை காக்கின்றனர். இதேபோல் நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு போலீசார் உள்நாட்டு பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். பொதுமக்களின் உடமை, உயிருக்கு காவலாக இருப்பது போலீஸ்காரர்களே.

குற்ற தடுப்பு

மக்களோடு, மக்களாக கலந்து இருக்கும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, போலீசார் கைது செய்வதால் பல குற்றங்கள் முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன. இதேபோல் எதிர்பாராமல் கொள்ளை சம்பவம் நடந்து விட்டால் அதை துப்புதுலக்கி கொள்ளையர்களை கைது செய்வதோடு, கொள்ளை போன பொருட்களை மீட்டு கொடுப்பதும் போலீசாரின் முக்கிய பணியாகும்.

இதற்காக குற்ற வழக்குகளை விசாரித்த அனுபவம் கொண்ட போலீஸ்காரர்களை கொண்ட தனிப்படையினர் உள்ளனர். மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் ரோந்து செல்கின்றனர். இதற்காக ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதையும் மீறி கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து விடுகின்றன.

அதில் சில வழக்குகள் போலீசாருக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்து விடுகின்றன. இதனால் ஒருசில வழக்குகளை துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்வதில் பின்னடைவு ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் ஒருசில வழக்குகள் நிலுவையில் இருப்பதை அறியலாம்.

டாக்டர் தம்பதி வீட்டில் கொள்ளை

அதில் முக்கியமானதாக, கடந்த ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் டாக்டர் தம்பதி வீட்டில் நடந்த கொள்ளை சம்பவமும் ஒன்றாகும். ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த டாக்டர் தம்பதி சக்திவேல்-ராணி. இவர்கள், ஒட்டன்சத்திரம்-நாகனம்பட்டி சாலையில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுடன் சக்திவேலின் பெற்றோரும் வசிக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நள்ளிரவில் 4 முகமூடி கொள்ளையர்கள் சக்திவேல் வீட்டுக்குள் புகுந்தனர்.மேலும் சக்திவேல் குடும்பத்தினர் 4 பேரையும் கட்டிப்போட்ட கொள்ளையர்கள், வீட்டில் இருந்த 150 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். அதோடு கொள்ளையடித்த நகைகளுடன், வீட்டில் நிறுத்தி இருந்த டாக்டரின் காரிலேயே ஏறி தப்பினர். பின்னர் அந்த காரையும் கொடைரோடு அருகே அனாதையாக நிறுத்தி விட்டு சென்றுவிட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த கொள்ளை சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரவுடி நீராவி முருகன்

இதற்கிடையே கொள்ளையர்கள் இந்தியில் பேசியதோடு, கொடைரோடு அருகே கார் நிறுத்தப்பட்டு இருந்ததால் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் கொள்ளையடித்த நகைகளுடன் ரெயிலில் ஏறி தப்பி இருக்கலாம் என்ற கோணத்தில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர். அதில் எந்தவித முன்னேற்றம் இல்லை.

இதை தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடந்த நாளில் அந்த பகுதியில் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்களை ஆய்வு செய்தனர். அதில் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை சேர்ந்த பிரபல ரவுடி நீராவி முருகனின் செல்போன் எண், ஒட்டன்சத்திரத்தில் பயன்பாட்டில் இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் விழுந்தது.

துப்பு துலங்கவில்லை

எனவே நீராவி முருகனை பிடித்து விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். இதற்காக நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பதுங்கி இருந்த நீராவிமுருகனை தனிப்படை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது நடந்த என்கவுண்டரில் நீராவிமுருகன் சுட்டு கொல்லப்பட்டார். இதனால் ஒட்டன்சத்திரம் கொள்ளை வழக்கில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது.

மேலும் கொள்ளை நடந்த வீடு, தப்பிசென்ற பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை என்பதால் கொள்ளையர்களை பற்றிய எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இதனால் எந்த கோணத்தில் விசாரணையை தொடங்கினாலும் முடிவு இல்லாமல் தொடங்கிய இடத்திலேயே தனிப்படை போலீசார் வந்து நிற்கும் நிலை உள்ளது. இதனால் கொள்ளை நடந்து ஓராண்டாகியும் துப்புதுலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். எனினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறினர்.

3 வீடுகளில் கொள்ளை

அதேபோல் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரே அங்காளபரமேஸ்வரி நகர் உள்ளது. இந்த பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் பூட்டி இருந்த 3 வீடுகளை நோட்டமிட்டு மர்ம கும்பல் கைவரிசை காட்டியது. அதில் ஒரு வீட்டில் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.4½லட்சத்தை அள்ளி சென்றனர்.

மேலும் மற்றொரு வீட்டில் 5 பவுன் நகைகளும், 3-வது வீட்டில் ரூ.40 ஆயிரத்தையும் அந்த கும்பல் கொள்ளையடித்தது. இதுபற்றி தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரின் உருவம் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 மாதங்களாக தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எனினும் இதுவரை கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை. அந்த கொள்ளை சம்பவங்களில் சந்தேகப்படும் நபர் ஒருவர் கோவை சிறையில் இருப்பது 2 மாதங்களுக்கு முன்பு தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. எனினும் இதுவரை அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. அதேபோல் திருச்சி, ஆந்திராவை சேர்ந்த கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் தனிப்படை போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் 5 மாத விசாரணையில் கொள்ளையர்கள் யார்? என்பது தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.

பேராசிரியர் கொலை

திண்டுக்கல் அங்குவிலாஸ் இறக்கம் பகுதியை சேர்ந்தவர் பேராசிரியர் சீனிநடராஜன். கடந்த 2016-ம் ஆண்டு இவர் வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் எந்தவித முன்னேற்றமும் கிடைக்கவில்லை. மேலும் கொலை செய்யப்பட்ட பேராசிரியரின் உறவினர்கள், நட்பு வட்டாரத்தில் இருந்தவர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்களிடம் இதுவரை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். எனினும் இதுவரை கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் பற்றிய துப்பு துலங்கவில்லை.

இதனால் பேராசிரியர் கொலையில் விழுந்த முடிச்சை அவிழ்க்க முடியாமல் 6 ஆண்டுகளாக போலீசார் திணறுகின்றனர். இதுபோன்ற நிலுவையில் இருக்கும் வழக்குகளை போலீஸ் சூப்பிரண்டு நேரடி மேற்பார்வையில் விசாரித்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Tags:    

மேலும் செய்திகள்