பருவம் தவறி பெய்த மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு

திருவெறும்பூர் வட்டாரத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கலெக்டரிம் மனு அளித்தனர்.

Update: 2023-02-13 19:54 GMT

திருவெறும்பூர் வட்டாரத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கலெக்டரிம் மனு அளித்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். த.மா.கா. திருவெறும்பூர் வட்டார தலைவர் சக்திவேல் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் நோய் தாக்கிய நெற்பயிர்களுடன் திரண்டு வந்து கொடுத்த மனுவில், திருநெடுங்குளம், தேவராயநேரி கிராமங்களில் பருவம் தப்பி பெய்த மழை காரணமாக 600 ஏக்கருக்கு மேல் புகையான் நோய் மற்றும் குலைநோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 1 ஏக்கருக்கு ரூ.35 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்தும் 10 மூட்டை கூட கிடைக்காமல் போகும் அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக திருவெறும்பூர் பகுதியில் மட்டும் 12 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு உரிய இழப்பீட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்துடன் திருவெறும்பூர் பகுதியை டெல்டா பகுதியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

விடுதி வசதி வேண்டும்

அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் கொடுத்த மனுவில், திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் படிக்கின்றனர். அவர்கள் தங்கி படிப்பதற்கு விடுதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாணவர்கள் தங்குவதற்கு அரசு சட்டக்கல்லூரி பக்கத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தபடாமல் கிடக்கும் இளைஞர்கள் விடுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் கல்லூரிக்கு வரக்கூடிய மாணவர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக அரசு சட்டக்கல்லூரி பஸ்நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கூடாது

கூத்தைப்பார் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலு, காமராஜ், ராமசாமி, மருதராஜ், தனபால் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து கடந்த மாதம் 22-ந்தேதி பொது மந்தையில் ஜல்லிக்கட்டை அமைதியான முறையில் நடத்திவிட்டோம். இந்தநிலையில் சமுதாய பிரச்சினையை உருவாக்கும் வகையில் தற்போது, மீண்டும் வருகிற 19-ந்தேதி ஜல்லிக்கட்டை நடத்த தனிநபர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார். அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

மிரட்டல்

திருச்சி ஜனநாயக சமூகநலக்கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் பொதுமக்கள் கொடுத்த மனுவில், கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்டவர் மீதே நடவடிக்கை எடுப்பதாக மணப்பாறை காவல்துறையினர் மிரட்டுகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

கூட்டத்தில் பல்வேறு குறைகள், கோரிக்கைகள் தொடர்பாக 541 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி தீர்வுகாண கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்