பாதுகாப்பற்ற நிலையில் தண்டவாளத்தை கடக்கும் கிராம மக்கள்
திருவாரூர் அருகே தற்காலிக பாதை அமைத்து பாதுகாப்பற்ற நிலையில் ரெயில் தண்டவாளத்தை கிராம மக்கள் கடந்து செல்கின்றனர். எனவே ரெயில்வே கேட் அமைத்து நிரந்தர சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் அருகே தற்காலிக பாதை அமைத்து பாதுகாப்பற்ற நிலையில் ரெயில் தண்டவாளத்தை கிராம மக்கள் கடந்து செல்கின்றனர். எனவே ரெயில்வே கேட் அமைத்து நிரந்தர சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டாற்று பாலம்
திருவாரூர் அருகே கூடூர் காட்டாற்று பாலம் அருகில் கல்யாணமகாதேவி செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த பாதையில் கூத்தங்குடி, மேலகூத்தங்குடி, அன்னுக்குடி போன்ற 5-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் கல்வி, வேலை, மருத்துவ வசதி போன்ற தேவைகளுக்கு திருவாரூர் பகுதிக்கு தான் வர வேண்டும்.
ரெயில்வே கீழ்பாலம்
இந்த வழிப்பாதையில் திருவாரூர்- திருத்துறைப்பூண்டி செல்லும் ரெயில்வே பாதையை ஆள் இல்லாத ரெயில் கேட்டை கடந்து செல்ல வேண்டும். இந்தநிலையில் கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு ரெயில்வே நிர்வாகம் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை அகற்றிடும் வகையில் காட்டாற்றின் கரையில் சிமெண்ட் கான்கீரிட் தடுப்பு அமைத்து ரெயில்வே கீழ்பாலம் அமைத்தனர். இந்த கீழ்பாலம் எந்தவித பயனும் அளிக்காது என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பணிகள் முடிக்கப்பட்டன.இங்குள்ள காட்டாறு என்பது பாசனம் மற்றும் வடிகாலாகவும் இருந்து வருகிறது. மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் காட்டாற்றில் தான் அதிக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கீழ்பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கிய நிலையில் காட்டாற்றின் தண்ணீர் தடுப்பு சுவரை தாண்டி கீழ்பாலத்திற்கு புகுந்து குளம் போல் தேங்கி நின்றது. இந்த தண்ணீரை அப்புறப்படுத்த மோட்டார் வசதியோ, தண்ணீர் உள்ளே புகாமல் தடுக்க எந்தவித வசதியும் செய்யப்படவில்லை.
தற்காலிக பாதை
இதனால் ஆண்டு முழுவதும் கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதி கிராம மக்கள் வேலை, மருத்துவம், கல்வி போன்றவற்றை பெறுவதற்கு திருவாரூர் வர வேண்டிய நிலையில் கீழ்பாலம் அருகில் ஆள் இல்லாத ரெயில்வே கேட் இருந்த இடத்தில் தற்காலிக பாதை அமைத்து தண்டவாள பாதையை கடந்து செல்கின்றனர். மிகுந்த உயரத்தில் அமைந்துள்ள தண்டவாள பாதையில் சிரமப்பட்டு ஏறி இருபக்கமும் ரெயில் வருகிறதா? என பார்த்து தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய அவலநிலை இருந்து வருகிறது.எனவே இந்த ரெயில்வே பாதையில் ஆள் உள்ள ரெயில்வே கேட் அமைத்து நிரந்த வழிப்பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.