குற்றங்கள் நிரூபிக்கப்படாமல்ஜெயிலில் உள்ள 75 சதவீதம் பேரை விடுதலை செய்ய வேண்டும்;கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் ஜெயில்களில் அடைக்கப்பட்டு உள்ள 75 சதவீதம் பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் ஜெயில்களில் அடைக்கப்பட்டு உள்ள 75 சதவீதம் பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
ஜெயிலில் இருப்பவர்கள்
ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-
இந்தியாவில் உள்ள ஜெயில்களில் அடைக்கப்பட்டு உள்ள 75 சதவீதம்பேர் தண்டனை அறிவிக்கப்படாதவர்கள். குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள். விசாரணை, வழக்கு நிலுவை உள்ளிட்ட காரணங்களாலும், ஜாமீன் எடுக்கக்கூட வசதி இல்லாதவர்களும் என இவர்கள் ஜெயில்களில் அடைக்கப்பட்டு உள்ளனர். போலீஸ் காவல் 15 நாட்களுக்கு பிறகு நீதிமன்ற காவல் என்று போடப்படுவது தேவை இல்லாதது.
ஜெயிலில் இருப்பவர்களில் தண்டனை பெற்றவர்கள், கொடூர செயல்களில் ஈடுபட்டவர்கள் தவிர சாதாரண குற்றவாளிகளை ஜெயிலில் வைக்காமல் ஜாமீன் வழங்க வேண்டும். நானே எனது அனுபவத்தில் இருந்து கூறுகிறேன். ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூலம் ஜெயில்களிலேயே மக்கள் நீதிமன்றம் அமைத்து சரியான காரணங்களுடன் உடனடி ஜாமீன் வழங்க வேண்டும். இதில் மதம், ஜாதி என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் தேவையில்லாமல் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ள 75 சதவீதம் பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.
100 நாள் வேலை உறுதி திட்டத்துக்கு நிதி குறைக்கப்பட்டு இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி வழங்கவில்லை. எய்ம்ஸ் என்ற பெயரில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. குஜராத்தை சேர்ந்த மத்திய மந்திரிக்கு மதுரைக்கும் ராமநாதபுரத்துக்கும் வேறுபாடு தெரியாமல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி நடப்பதாக கூறுகிறார்.
அரசின் கடமை
அதானி நிறுவனத்தின் வீழ்ச்சி என்பது சாதாரணமானது. தனியார் நிறுவனங்கள் வளருவது, வீழ்ச்சி அடைவது நடைபெறுவதுதான். ஆனால், இந்த நிறுவனங்களை கண்காணிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தோல்வி அடைந்து விட்டன. பாரத ஸ்டேட் வங்கி குழுமம் அதானி நிறுவனத்துக்கு ரூ.27 ஆயிரம் கோடியை எப்படி வழங்கியது. எல்.ஐ.சி. நிறுவனம் ஒரே நிறுவனத்தில் எப்படி முதலீடு செய்தது என்பதைப்பற்றி செபி, ஆர்.பி.ஐ. ஆகிய அரசு நிறுவன அதிகாரிகள், நிதி மந்திரி, நிதித்துறை செயலாளர், பிரதமர் யாராவது பதில் அளிக்க வேண்டும். அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் பொய் சொல்கிறது என்றால், அதை நிரூபிக்க வேண்டியது அரசின் கடமை.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
அவரிடம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி குறித்து கேட்டபோது, 'நாக்பூர் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெறும். நாக்பூருக்கும் அ.தி.மு.க.வுக்கும் தொடர்பு இருக்கிறது. எனவே அவர்கள் நாக்பூர் கிரிக்கெட் வெற்றி குறித்து கூறி இருப்பார்கள்' என்றார்.