பணி நிரந்தரம் செய்யாவிட்டால் காலவரையற்ற போராட்டம்

பணி நிரந்தரம் செய்யாவிட்டால் காலவரையற்ற போராட்டம் நடத்துவோம் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மனு அளித்தனர்.

Update: 2022-09-26 18:45 GMT

கோவை

பணி நிரந்தரம் செய்யாவிட்டால் காலவரையற்ற போராட்டம் நடத்துவோம் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்ததால், கலெக்டர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதனால் மனு கொடுக்க வந்த பொதுமக்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே போலீசார் அனுமதித்தனர். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தனர். அதை பெற்ற கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கழிப்பிடம் இல்லை

கோவை பீளமேடு ஏ.டி. காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் இந்த காலனியில் 50 ஆண்டுக்கும் மேல் வசித்து வருகிறோம். இதுவரை பொது கழிப்பிடம் கட்டிக்கொடுக்கப்படவில்லை. இதனால் நாங்கள் அருகே உள்ள பெரியக்கடை சந்து, நேருநகர், சி.எம்.சி. காலனி ஆகிய பகுதிக்கு சென்று வருகிறோம். சில நேரத்தில் அங்குள்ள கழிப்பிடத்தை யாரும் உபயோகப்படுத்தினால் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையும் நீடித்து வருகிறது. எனவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு உடனடியாக பொது கழிப்பிடம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

கோவை மாநகராட்சி 72-வது வார்டு சுந்தரம் வீதியை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு குடிசை மாற்றுவாரியம் சார்பில் வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் மந்த நிலையில் இருக்கிறது. எனவே தாங்கள் நடவடிக்கை எடுத்து பணிகளை துரிதப்படுத்தி விரைவில் முடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

காலவரையற்ற போராட்டம்

கோவை மாவட்ட ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் சங்கங்களின் போராட்ட கூட்டமைப்பு சார்பில் கொடுத்த மனுவில், கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் அரசு ஆஸ்பத்திரிகள், பள்ளிகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி, பணி நிரந்தரம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு பலமுறை மனு அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 2-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்