சுசீந்திரம் கோவிலில் சாமி கும்பிட வந்த போது மத்திய மந்திரியின் மனைவி தவற விட்ட பர்ஸ் மீட்பு

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சாமி கும்பிட வந்த போது மத்திய இணை மந்திரியின் மனைவி தவற விட்ட மணி பர்சை ரெயில் நிலையத்தில் போலீசார் மீட்டனர்.

Update: 2022-07-12 18:01 GMT

சுசீந்திரம்,

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சாமி கும்பிட வந்த போது மத்திய இணை மந்திரியின் மனைவி தவற விட்ட மணி பர்சை ரெயில் நிலையத்தில் போலீசார் மீட்டனர்.

கோவிலில் சாமி தரிசனம்

மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று காலையில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தனது மனைவி அஞ்சலி காரத் மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார்.

அவரை கோவில் நிர்வாகம் சார்பில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர். பின்னர் மத்திய மந்திரி தனது குடும்பத்தினருடன் தட்சிணாமூர்த்தி, கொன்றையடி, தாணுமாலயன் சன்னதி, இந்திர விநாயகர் சன்னதி போன்றவற்றில் சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது மந்திரியின் மனைவி அஞ்சலி காரத் தனது மணிபர்சை தவறவிட்டது தெரிய வந்தது. உடனே அவருடன் வந்தவர்கள் கோவில் முழுவதும் சல்லடை போட்டு தேடினர். ஆனால், பர்சு கிடைக்கவில்லை.

கண்காணிப்பு கேமரா ஆய்வு

இதுகுறித்து பாதுகாப்புக்காக வந்த போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்ைவயிட்டனர். அப்போது இந்திர விநாயகர் சன்னதி அருகே மத்திய மந்திரியின் மனைவி வந்த போது அவரது கையில் இருந்து மணி பர்ஸ் தவறி விழுவதும், அதை சாமி தரிசனம் செய்ய வந்த ஒருவர் எடுத்து செல்வதும் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் கேமராவில் பதிவான காட்சியை அடிப்படையாக கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பர்சை எடுத்தவர் சென்னையை சேர்ந்த ஒரு ஜோதிடர் என்பதும், அவர் நாகர்கோவில் ெரயில் நிலையத்தில் ெரயிலுக்காக காத்திருப்பதும் தெரிய வந்தது.

ரெயில் நிலையத்தில் மீட்பு

உடனே போலீசார் ரெயில் நிலையத்துக்கு விரைந்து ெசன்று அவரிடம் இருந்து பர்சை மீட்டு மத்திய மந்திரியின் மனைவியிடம் ஒப்படைத்தனர். முன்னதாக கோவிலுக்கு வந்த மத்திய இணை மந்திரியுடன் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, சுசீந்திரம் முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேஷ், பா.ஜனதா பிரமுகர் ரவீந்திரன், கவுன்சிலர் வள்ளியம்மாள் மற்றும் பலர் உடன் வந்திருந்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்