நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகளை மத்திய மந்திரி வி.கே.சிங் ஆய்வு

நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் கட்டுமான பணிகளை மத்திய மந்திரி வி.கே.சிங் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-06-27 19:39 GMT

நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக நெல்லை சந்திப்பு பகுதிக்கு வருகின்ற பஸ்கள் பொருட்காட்சி மைதானத்தில் இருந்து இயக்கப்பட்டது. இந்த பஸ்நிலைய கட்டுமான பணி 70 சதவீதம் முடிவடைந்த நிலையில் பஸ்நிலையத்தின் வெளிப்பகுதியில் இருந்து டவுன் பஸ்கள் மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. தென்காசி, செங்கோட்டை, முக்கூடல், சுரண்டை பகுதியில் இருந்து வருகின்ற புறநகர் பஸ்களையும் இந்த வழியாக இயக்க வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய மந்திரி வி.கே.சிங் நேற்று மதியம் நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்திற்கு வந்தார். அங்கு நடைபெறும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் பஸ்நிலையத்தில் சூரிய மின் ஒளி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து மத்திய மந்திரி வி.கே.சிங் நிருபர்களிடம் கூறுகையில், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற நெல்லை சந்திப்பு பஸ்நிலையப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இங்கு வருங்கால மக்களின் வசதிக்காக சூரிய ஒளி மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளேன். மேலும் இங்கிருந்து சந்திப்பு ெரயில் நிலையம் செல்வதற்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளேன்" என்றார். நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் லெனின், சுகாதார ஆய்வாளர் முருகன், தாசில்தார் சுப்பு, பா.ஜனதா மாவட்ட தலைவர் தயாசங்கர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்