அதிகாரிகளை கண்டித்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெளிநடப்பு

அதிகாரிகளை கண்டித்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2022-11-07 18:01 GMT

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா மற்றும் ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து ஆகியோர் கையொப்பமிட்ட அறிவிப்பு கடந்த 15 நாட்களுக்கு முன்பு அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு ஒன்றியக்குழு கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவர் தேன்மொழி வைத்தி உள்ளிட்ட தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டம் அரங்கில் நீண்ட நேரம் காத்திருந்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, நாராயணன் உள்ளிட்ட எந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களும் கூட்ட அரங்கத்திற்கு வரவில்லை. சுமார் 2 மணி நேரம் கூட்ட அரங்கில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பொறுமையாக காத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் வராததால் அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களும் அதற்கு கண்டனம் தெரிவித்து பேசினர். பின்னர் வருகை பதிவேடு கொண்டுவரப்பட்டு அதில் அனைத்து உறுப்பினர்களும் தங்களது வருகையை பதிவு செய்தனர். அதிகாரிகள் கூட்டத்திற்கு வராததால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. உறுப்பினர்கள் அதிகாரிகள் மீது சரமாரியாக புகார்களை தெரிவித்து பேசினர். இறுதியாக பேசிய ஒன்றியக்குழு தலைவர், ஒன்றியக்குழு கூட்டத்தை அதிகாரிகள் புறக்கணித்து அவைக்கு வர மறுத்து விட்டதால் கூட்டத்தை ஒத்திவைத்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து கூட்ட அரங்கில் இருந்த அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களும் அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பிய வாரே கூட்ட அரங்கத்தை விட்டு வெளியேறினர். பின்னர் ஒன்றியக்குழு தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, நாராயணன் ஆகியோர் கலந்து கொள்ளாததை கண்டித்ததோடு நிர்வாக ரீதியாக ஆண்டிமடம் ஒன்றியத்தின் வளர்ச்சி பணிகளுக்கு அதிகாரிகள் முட்டுக்கட்டையாக இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர், தமிழக அரசு ஆகியோர் ஆண்டிமடம் ஒன்றியத்தில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை செய்து வரும் அதிகாரிகளை துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் கூட்டத்திற்கு அதிகாரிகள் வராதது குறித்து அலுவலகத்தில் கேட்டபோது திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சென்றதாகவும், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மற்றும் மேலாளர் உட்பட சென்னை சென்றுள்ளதாகவும், அதனால் கூட்டத்திற்கு கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். கூட்டத்திற்கு தேதி அறிவித்து கையப்பமிட்டு கூட்டம் நடத்த தபால் கொடுத்துவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகளால் கவுன்சிலர்கள் மிகுந்த ஆவேசம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்