பழுதடைந்த 54 பள்ளி கட்டிடங்களை ஒன்றிய குழு கூட்டத்தில் இடிக்க முடிவு
மேற்கு ஆரணி ஒன்றியத்தில் பழுதடைந்த 54 பள்ளி கட்டிடங்களை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆரணி
மேற்கு ஆரணி ஒன்றியத்தில் பழுதடைந்த 54 பள்ளி கட்டிடங்களை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம்
ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவில் அருகாமையில் அமைந்துள்ள மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் ஆ.வேலாயுதம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெ.திலகவதி வரவேற்றார். அலுவலக கணக்காளர் சிவா தீர்மானங்களை படிக்கும்போது ஒன்றிய குழு உறுப்பினர் ஏழுமலை (பா.ம.க.), துணை தலைவர் வேலாயுதம் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
பகுத்தறிவு மாமது (தி.மு.க.), ஜெயச்சந்திரன் (அ.தி.மு.க.):
புதிய கட்டிடத்தில் 2-வது கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து வசதிகள் செய்து கொடுத்தும் உறுப்பினர்கள் மன்ற கூட்டத்தின்போது தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காகவும் பேசுவதற்கும் ஒலிபெருக்கி வசதி செய்து தர வேண்டும்.
குமாரராஜன் (தி.மு.க.): ஒன்றிய பொது நிதியிலிருந்து ஊராட்சிகளில் மரக்கன்று நடுவதற்கு நிதி ஒதுக்கி தந்தாலும், அதற்கான நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்ட ஒன்றிய குழு உறுப்பினரை அழைப்பதில்லை. அவ்வாறு சென்றாலும் ஊராட்சியில் எங்களை மதிப்பதில்லை.
இவ்வாறு குமாரராஜன் பேசியதும் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து பேசினர். அப்போது அவர்கள் பேசுகையில், ஒன்றிய நிதியில் பணிகளை மேற்கொள்ளும் ஊராட்சி நிர்வாகம் எங்களை மதிக்காதபோது ஏன் ஒன்றிய குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும்.
அடுத்த தேர்தலில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவியே வேண்டாம். அந்த தேர்தலையே நிறுத்திவிடலாம். ஊராட்சிகளிலேயே உள்ளாட்சி பிரதிநிதிகளை நியமித்து விடலாம் என ஆவேசமாக கூறினர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பானது.
பள்ளிக்கட்டிடங்கள்
கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள 76 பாழடைந்த பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட கட்டிடங்களை இடித்திட வேண்டுமென உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சவிதா நன்றி கூறினார்.