தலைமை ஆசிரியர் வீட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
தர்மபுரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. உடல் தூக்கில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. உடல் தூக்கில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டில் ஆண் பிணம்
தர்மபுரி நெல்லி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 55). அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நெல்லி நகர் பகுதியில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். கடந்த 10 நாட்களாக சொந்த வேலை காரணமாக வெளியூருக்கு சென்று விட்டார்.
அவருடைய வீட்டில் துர்நாற்றம் வீசியது. இது பற்றி அருகே வசிப்பவர்கள் அவருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அங்கு சென்ற அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
போலீசார் விசாரணை
அவருடைய உடல் அழுகிய நிலையில் இருந்தது. தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? வீட்டிற்குள் எப்படி வந்தார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமை ஆசிரியர் வீட்டில் அடையாளம் தெரியாத நபர், தூக்கில் பிணமாக தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.