மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.6.2023-ம் தேதியோடு 5 ஆண்டுகள் முடிவடைந்த முறையாக பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களும், 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் தகுதியுடையவர்கள் ஆவர். மாற்றுத்திறனாளிகளில் எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.6.2023 அன்று ஓராண்டு முடிவடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ரூ.72 ஆயிரம்
இதில் பதிவு செய்ய பொது பிரிவினர் 40 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு மற்றும் வயது வரம்பு கிடையாது. முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற முடியாது. மேலும் விண்ணப்பிப்பவர்கள் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் பயிலுபவராக இருக்கக்கூடாது. தகுதியுடைய வேலைவாய்ப்பற்றோர் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி அல்லது கல்லூரி மாற்றுச்சான்றிதழ், ரேஷன்கார்டு ஆகியவற்றுடன் விண்ணப்ப படிவம் இணைத்து திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பட்டப்படிப்பு
இதில், பொதுப்பிரிவினரில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600-ம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளில் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1000-ம் மாதந்தோறும் வழங்கப்படும்.
ஏற்கனவே 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற்கல்வி, பட்டப்படிப்புகள் முடித்தவர்களுக்கு இந்த உதவித்தொகை பெற தகுதியில்லை. இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.