ரூ.23 லட்சம் மோசடி புகாரில் தலைமறைவான போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்

ரூ.23 லட்சம் மோசடி புகாரில் தலைமறைவான போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-09-02 23:04 GMT

சேலம் லைன்மேடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 45). இவர் சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் தாதகாப்பட்டியை சேர்ந்த நகைப்பட்டறை அதிபரான செந்தில்குமாரிடம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யுமாறு கூறி ரூ.47 லட்சத்தை பெற்றார். அதன்பிறகு ரூ.24 லட்சத்தை திரும்ப பெற்று தந்த முத்துசாமி, மீதி ரூ.23 லட்சத்தை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். இதுதொடர்பாக போலீஸ் ஏட்டுவிடம் செந்தில்குமார் பலமுறை கேட்டும் பணத்தை கொடுக்கவில்லை. மேலும் அவருக்கு முத்துசாமி கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சேலம் மத்திய குற்றப்பிரிவில் செந்தில்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஏட்டு முத்துசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர் மாநகர் கட்டுப்பாடு அறைக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு அவர் மருத்துவ விடுப்பில் சென்றவர், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். அதன்பேரில் மோசடி புகாரில் தலைமறைவான ஏட்டு முத்துசாமியை நேற்று முன்தினம் பணி இடைநீக்கம் செய்து துணை கமிஷனர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்