தகவல் உரிமை சட்டத்தில் மனு அளித்தவர் குடும்பத்துடன் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு; முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 9 பேர் மீது வழக்கு

வீரப்பட்டி ஊராட்சியின் வரவு-செலவு கணக்கை அறிய தகவல் உரிமை சட்டத்தில் மனு அளித்தவரை குடும்பத்துடன் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 9 ேபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2023-01-22 18:37 GMT

வரவு-செலவு கணக்கு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வீரப்பட்டியை சேர்ந்தவர் மாயழகு. இவரது மகன் மேகநாதன் (வயது 37). இவர் இலுப்பூரில் முடிதிருத்தும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு வீரப்பட்டி ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகளை அறிந்து கொள்ள அப்போதைய தலைவருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி மனு செய்துள்ளார்.

இதையடுத்து அப்போதைய வீரப்பட்டி ஊராட்சி தலைவரின் கணவர் தங்கராஜ் உள்ளிட்ட சிலர் மேகநாதன் மற்றும் அவரது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.

9 பேர் மீது வழக்கு

இதனால் பாதிக்கப்பட்ட மேகநாதன் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து இலுப்பூர் ஆர்.டி.ஓ. அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி இந்த வழக்கு தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள அன்னவாசல் போலீசாருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, வீரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தங்கராஜ், வீரப்பட்டியை சேர்ந்த நாகராஜ், சாகுல்அமீது, பாண்டியன், குருசாமி, சொக்கலிங்கம், செவ்வந்தி, முருகேசன், குருசாமி ஆகிய 9 பேர் மீது அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்