நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி விளையாட்டு மைதானங்கள் அமைக்க திட்டம் - அதிகாரி தகவல்
நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் உள்ள 30 பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி விளையாட்டு மைதானங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் அமைத்தல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல் போன்ற வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல, நிர்பயா திட்டத்தின்கீழ் பெண்களுக்கான கழிப்பறைகள் அமைத்தல், சானிட்டரி நாப்கின் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் மாணவிகளின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில், பூப்பந்து அல்லது கூடைப்பந்து மைதானங்களை புதிதாக கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. ஜூடோ, கராத்தே போன்ற பிற விளையாட்டுகள் மூலம் தற்காப்பு பயிற்சியுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அரசு பள்ளி மாணவிகளின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் வகையில் நிர்பயா திட்டத்தின் கீழ் சுமார் 30 மாநகராட்சி பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி விளையாட்டு மைதானங்களை புதிதாக கட்ட நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
மைதானங்கள் அமைக்க பள்ளிகளில் போதுமான இடவசதி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஏற்கனவே மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு நிர்பயா திட்டத்தின் கீழ் சானிட்டரி நாப்கின்களை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.
இதேபோல, மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சமாக அதிகரித்து இருந்தது. இம்முறை அந்த எண்ணிக்கை 98 ஆயிரமாக குறைந்துள்ளது.
எனவே, மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வரும் கல்வி ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்க உள்ளோம். அரசு பள்ளிகளில் உள்ள சிறப்பான திட்டங்கள் குறித்து ஆசிரியர்கள் மூலம் பெற்றோர்களுக்கு நேரடியாக சென்று எடுத்துக்கூற திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.