பிரதம மந்திரி திட்டத்தின் கீழ்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:கலெக்டர் தகவல்

பிரதம மந்திரியின் இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2023-07-30 18:45 GMT

கல்வி உதவித்தொகை

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து எழுத்துத்தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம். 2023-24-ம் நிதியாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 3,093 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டடுள்ளது. விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். https://yet.nta.ac.in, என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்து கொண்டிருக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு

9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த நுழைவுத்தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். வருகிற 10-ந்தேதிக்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

12 முதல் 16-ந்தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். எழுத்துத்தேர்வு செப்டம்பர் 29-ந்தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமான சான்றிதழ், சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். https://yet.nta.ac.in மற்றும் http://socialjustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்கள் மூலம் மேலும் விவரங்களை அறியலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்