திருச்செந்தூரில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வங்கி ஏ.டி.எம். கார்டு: கனிமொழி எம்.பி. வழங்கினார்
திருச்செந்தூரில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வங்கி ஏ.டி.எம். கார்டுகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு, கனிமொழி எம்.பி. வங்கி ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார்.
பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க நிகழ்ச்சி நேற்று காலையில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன் வரவேற்று பேசினார்.
விழாவில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வங்கி ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்தநிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், திருச்செந்தூர் தாசில்தார் வாமனன், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், துணை தாசில்தார்கள் முத்துமாரி, சங்கரநாராயணன், நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவை தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், ஒன்றிய செயலாளர்கள் பார்த்திபன், இளங்கோ, நகர செயலாளர் வாள்சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கலையரங்கிற்கு அடிக்கல்
இதை தொடர்ந்து திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு புதிய கலையரங்கம் கட்டுவதற்கு பள்ளி மாணவிகளுடன் இணைந்து அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத்தலைவர், ஆணையாளர் கண்மணி, பள்ளி தலைமையாசிரியர் கங்காகௌரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.