பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
கண்டாச்சிமங்கலம்:
தியாகதுருகம் அருகே சித்தலூரில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. அதன்படி ஆடி மாத அமாவாசையையொட்டி நேற்று இரவு மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் உற்சவர் பெரியநாயகி அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து பின்னர் ஊஞ்சலில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அம்மனுக்கு தாலாட்டுப்பாடி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் தியாகதுருகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.