கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க முடியாமல் விவசாயிகள் அலைக்கழிப்பு
வண்டல் மண் எடுக்க முடியாமல் அலைக்கழிக்கப்படுவதாகவும், இடைத்தரகர்கள் தொல்லை இருப்பதாகவும் விவசாயிகள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-
இன்றைக்கு விவசாயிகள் பலரும் இயற்கை விவசாயத்துக்கு திரும்பி வருகின்றனர். ரசாயன உரம் விலை உயர்வு ஒரு காரணம் என்றாலும், நஞ்சில்லா உணவு தேவையை பெருக்க வேண்டியது மற்றொரு காரணமாக உள்ளது. இயற்கை விவசாயத்துக்கு மண் வளம் முக்கியமானது. காலம் காலமாக ரசாயன உரங்கள் போட்டதால் மண்ணின் வளம் குறைந்துள்ளது. அதை மீட்டெடுக்க மண்ணை வளப்படுத்த வேண்டும். அதற்கு விளைநிலங்களில் வளமான வண்டல் மண் கலந்து உழவு செய்ய வேண்டியது அவசியம்.
ரசாயன உரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு விவசாயம் முழுக்க முழுக்க இயற்கை சார்ந்தே இருந்தது. இலை தழைகள், கால்நடைகளின் சாணம் போன்றவை இயற்கை விவசாயத்துக்கு வளமான உரமாக இருந்தது.
வண்டல் மண் எடுக்க இலவச அனுமதி
அதுபோல், மழைக் காலங்களில் விளைநிலங்களில் பெய்யும் மழையின் போது மழை நீரோடு மண்ணும் கலந்து ஓடும். அவ்வாறு அடித்துச் செல்லப்படும் மண் ஓடைகளிலும், கண்மாய், குளங்களிலும் படியும். அவ்வாறு படிந்த வண்டல் மண்ணை விவசாயிகள் மீண்டும் எடுத்து தங்களின் விளைநிலங்களில் போட்டு மண்ணின் வளத்தை பாதுகாத்து வந்தனர். முந்தைய கால கட்டத்தில் கண்மாய்களில் விவசாய பயன்பாட்டுக்கு மண் எடுப்பதில் எந்த இடையூறுகளையும் விவசாயிகள் சந்திக்கவில்லை. அவர்கள் தேவைப்பட்டபோது தங்கள் பகுதியில் இருந்த கண்மாய்களில் வண்டல் மண் எடுத்து விளை நிலங்களை வளப்படுத்தினர்.
நாளடைவில் விவசாயிகள் போர்வையில் மண் எடுத்து விற்பனை செய்யத் தொடங்கியதால், அதற்கு அரசு கடிவாளம் போட்டது. கண்மாய்கள், குளங்களில் அனுமதியின்றி மண் எடுக்க முடியாத சூழலை அரசு உருவாக்கியது. அதன்பிறகு விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு அருகில் கண்மாய்கள் இருந்தாலும் அனுமதியின்றி வண்டல் மண் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
பின்னர் விவசாயிகளின் நலன் கருதி, ஏரி, குளங்கள், கண்மாய்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டது. இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்றாலும், அதற்கு கனிம வளத்துறையிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்ற பின்பு விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு தேவையான வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் நடைமுறை
அதுபோல், செங்கல் சூளைகளுக்கு தேவையான மண் மற்றும் மண்பாண்ட பொருட்கள் செய்வதற்கு தேவையான களிமண் ஆகியவற்றையும் விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ள அரசு வழிவகை செய்தது. அதற்கான அறிவிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தேனி மாவட்டத்திலும் குளங்கள், கண்மாய்களில் இலவசமாக மண் எடுக்க அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என்று சமீபத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், "மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள், கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவையான மண், வண்டல் மண், களிமண் மற்றும் கிராவல் மண் ஆகியவற்றை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளலாம். நஞ்சை நிலமாக இருந்தால் 1 எக்டேருக்கு 185 கனமீட்டர் அளவும், புஞ்சை நிலமாக இருந்தால் 1 எக்டேருக்கு 222 கன மீட்டர் அளவும் எடுத்துக் கொள்ளலாம். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 60 கனமீட்டர் அளவில் களிமண் எடுத்துக் கொள்ளலாம். மண், கிராவல் மண் ஆகியவை 30 கன மீட்டருக்கு மிகாமல் எடுத்துக் கொள்ளலாம். சொந்த நிலம் உள்ள கிராமம் அல்லது அருகில் உள்ள கிராமத்துக்கு உட்பட்ட கண்மாயில் வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். அதற்கு 20 நட்களுக்கு மிகாமல் அனுமதி பெற விரும்புபவர்கள் நில உரிமை குறித்து கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ், பட்டா, சிட்டா ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் பயனாளிகள் எடுக்க உள்ள மண்ணை அங்கீகாரம் பெற்ற மண் பரிசோதனை ஆய்வகத்தில் ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
தேனி மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் பேர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களாக உள்ளனர். ஆனால், கடந்த ஆண்டுகளில் கண்மாய்களில் இலவச மண் எடுக்க ஆண்டுக்கு சுமார் 50 விவசாயிகளுக்கு கூட இலவச அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இவ்வாறு அனுமதி பெற விண்ணப்பித்தாலும் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாகவும், இடைத்தரகர்கள் தொல்லை இருப்பதாகவும் விவசாயிகள் பலர் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-
விவசாயிகள் அலைக்கழிப்பு
கண்ணன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர்) :- கண்மாய்கள், குளங்களில் விவசாயிகள் இலவசமாக மண் எடுத்துக் கொள்ளலாம் என்ற அரசின் உத்தரவு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் அதற்கான அனுமதி பெற விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். கனிம வளத்துறை அலுவலகத்துக்கு இதுதொடர்பாக விவசாயிகள் மனு கொடுக்கச் சென்றாலோ, கூடுதல் தகவல்களை கேட்கச் சென்றாலோ முறையாக பதில் கிடைப்பது இல்லை. இந்த நடைமுறை என்பது இடைத்தரகர்கள், மண் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் தான் உள்ளது. எனவே, இதனை ஏழை, எளிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும். எந்தெந்த கண்மாய்கள், குளங்களில் மண் எடுக்கலாம் என்ற அறிவிப்பை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் அறிவிப்பு பதாகையாக வைக்க வேண்டும். அவ்வாறு அறிவிப்பு செய்யப்பட்ட இடங்களில் இலவச அனுமதி பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். இந்த முகாமில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கனிம வளத்துறை ஆகிய துறை அதிகாரிகள் இடம் பெற வேண்டும். முகாமில் விண்ணப்பம் அளிக்கும் விவசாயிகளின் மனுக்களை பரிசீலனை செய்து முகாமிலேயே அனுமதி வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால், ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமான விவசாயிகள் முன்வந்து விண்ணப்பம் அளிப்பார்கள். அதிக அளவில் விவசாயிகள் முன்வந்து மண் எடுக்கும் போது, கண்மாய்கள் தூர்வாரி ஆழப்படுத்தப்படும். இதன் மூலம் நீர்நிலைகளும் பாதுகாக்கப்படும். விளை நிலங்களும் வளம்பெறும். விவசாயிகளுக்கும் அலைக்கழிப்பு, இடைத்தரகர்கள் தொல்லை இருக்காது.
சிறப்பு முகாம்கள் நடத்தலாம்
சீனிராஜ் (தமிழக தேசிய விவசாயிகள் சங்க தேனி மாவட்ட தலைவர்) :- கண்மாய்களில் விவசாய பயன்பாட்டுக்கு இலவச மண் எடுப்பதற்கான அனுமதி ஏழை, எளிய விவசாயிகளுக்கு கிடைப்பதே இல்லை. கடந்த கால புள்ளி விவரங்களை ஆய்வு செய்து எத்தனை ஏழை, எளிய விவசாயிகள் பயன் பெற்றுள்ளார்கள் என்று பார்த்தாலே இந்த திட்டம் எந்த அளவுக்கு விவசாயிகளால் பயன்படுத்தப்படாமல் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். தற்போது எந்த ஒரு திட்டங்களின் கீழ் பயன்பெற வேண்டும் என்றாலும் இணையவழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை வந்துள்ளது. ஆனால், கனிமவளத்துறையில் இலவச வண்டல் மண் எடுக்கும் அனுமதி என்பது நேரடியாக மனு கொடுக்கும் நடைமுறையில் தான் இருக்கிறது. அதையும் இணையவழியில் என்று மாற்றினால் முறைகேடுகளை தவிர்க்க ஏதுவாக இருக்கும். அல்லது கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி இதற்கான அனுமதியை விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும், இதற்கான மண் பரிசோதனையை விவசாயிகள் செய்ய வேண்டும் என்பதும் விவசாயிகளை மேலும் அலைக்கழிக்க வைக்கும்.
முறைகேடுகள் நடக்காது
கருப்பசாமி (விவசாயி, டொம்புச்சேரி) :- சிறிய அளவில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் அன்றாடம் விவசாய பணிகளை செய்வதும், விவசாய கூலி வேலைகளுக்கு செல்வதும் வழக்கமாக இருக்கிறது. வெளியூர்களுக்கு சென்று வந்தால் கூட ஒரு நாள் பிழைப்பு கெடும். எனவே, அரசு திட்டங்களில் சிறிய விவசாயிகள் பயன்பெறுவதும், அதற்கு விண்ணப்பிப்பதும் கூட குறைவாக தான் இருக்கிறது. கனிமவளத்துறையில் இலவசமாக மண் எடுக்க அனுமதி பெறுவது சாத்தியமில்லை என்ற எண்ணத்தில் சிறுவிவசாயிகள் விண்ணப்பம் கொடுப்பதே இல்லை. அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் எளிதில் பயன்பெறும் வகையிலும் கண்மாய்கள் அமைந்துள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி அனுமதி வழங்கலாம். அது விவசாயிகளுக்கும் எளிதில் பயன்பெற ஏதுவாக இருக்கும். முறைகேடுகளும் நடக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.