தாய் இறந்த சோகம் தாங்காமல் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு

தாய் இறந்த சோகம் தாங்காமல் இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டு விட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-01 10:27 GMT

சென்னை தண்டையார்பேட்டை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர், மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி. இவர், 12 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு ரஞ்சிதா என்ற மகளும், ராஜி (வயது 27) என்ற மகனும் உள்ளனர். மகள், மகனுடன் செந்தில் வசித்து வந்தார்.

ராஜி, சென்னை பூக்கடை பகுதியில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். ராஜிக்கு 15 வயது இருக்கும்போது அவரது தாய் இறந்து விட்டார். தாய் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த ராஜியால், தாயாரின் இறப்பை தாங்க முடியவில்லை. தாயை இழந்து 12 ஆண்டுகளாகியும் தாய் நினைவாகவே இருந்து வந்தார்.

கடந்த ஒரு வாரமாக ராஜி, தனக்கு தாய் நினைப்பாக இருப்பதாகவும், தனது தாயை பார்க்க வேண்டும் எனவும் தனது அக்கா, அப்பா மற்றும் நண்பர்களிடம் கூறி வந்தார். அவர்கள் ராஜிக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் 3 பேரும் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினர். நள்ளிரவில் ராஜியின் அக்கா எழுந்து பார்த்தபோது, தனது தம்பி ராஜி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தற்கொலைக்கு முன்பாக ராஜி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனது அம்மா என்னை அழைக்கிறார். நான் அம்மாவை பார்க்க வேண்டும்" என உருக்கமாக பதிவிட்டு இருந்தார்.

இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்த சோகத்தில் பரிதவித்த மகன், 12 ஆண்டுகள் கழித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்