உளுந்தூர்பேட்டை: பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 3 பெண்கள் பலி

குழந்தையை பார்த்து விட்டு சென்னை திரும்பி வந்த போது சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2022-09-26 03:04 GMT

உளுந்தூர்பேட்டை, 

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஏஜாஸ் (வயது 28). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் குழந்தையையும், மனைவியையும் பார்ப்பதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சேலம் சென்றுள்ளார். அப்போது அவருடன் ஏஜாசின் தாய் சமீம் (50), தங்கை அம்ரின் (22), இவர்களது உறவினர் மகள் சுபேதா (21), மற்றும் நசீம் (45) ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

பின்னர் நேற்று நள்ளிரவில் சேலத்தில் இருந்து சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணி அளவில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள தனியார் பால் பண்ணை அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சமீம், அம்ரின், சுபேதா அகிய மூன்று பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

காரை ஓட்டி வந்த ஏஜாஸ் மற்றும் நசீம் அகியோர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்த மூன்று பெண்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்