சென்னை விமான நிலையத்தில் ரூ.5½ கோடி போதைமாத்திரைகள் பறிமுதல் - உகாண்டா நாட்டு பயணி கைது
சென்னை விமான நிலையத்தில் ‘அயன்’ திரைப்பட பாணியில் வயிற்றில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.5½ கோடி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் போதை மாத்திரைகள் கடத்தி வருவதாக விமானநிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய
தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, சார்ஜா விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை கண்காணித்த போது, ஒருவரது நடவடிக்கையின் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் வாலிபரை நிறுத்தி விசாரித்த
னர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் உகாண்டா நாட்டை சேர்ந்த லுபன் பங்கிரே (வயது 26) என்றும், சென்னைக்கு சுற்றுலா வந்ததாக கூறி முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரது உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்த போது எதுவும் சிக்கவில்லை .
பின்னர் வாலிபரை தனியறைக்கு அழைத்து சென்று விசாரித்ததில், அவரது வயிற்றில் ஏதோ மர்ம பொருள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதை ஸ்கேன் செய்து பார்த்த போது, வயிற்றில் அதிகமான மாத்திரைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உகாண்டா நாட்டு பயணியை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து இனிமா கொடுத்து வயிற்றில் வைத்து கடத்தி வந்த பொருளை கைப்பற்றினர். அப்போது போதை பொருளை மாத்திரை வடிவில் அடைத்து அதனை விழுங்கிய நிலையில், கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கைப்பற்றப்பட்ட 63 மாத்திரைகளை ஆய்வுக்காக அனுப்பியதில் ஹெராயின் போதை மாத்திரைகள் என தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, ரூ.5 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள 794.64 கிராம் எடைக்கொண்ட ஹெராயின் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தல் தொடர்பாக உகாண்டா வாலிபரை கைது செய்தனர். மேலும், ஹெராயின் போதை மாத்திரைகள் யாருக்காக கடத்தி வரப்பட்டது? இதன் பின்னணியில் உள்ளவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 10 தினங்களுக்கு முன் சென்னை மற்றும் கோவையில் சினிமா படப்பாணியில் போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதே பாணியில் சென்னையில் உகாண்டா நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.