உடுமலை பகுதியில் தொடரும் திருட்டு சம்பவங்களைத் தடுக்க போலீசார் ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருட்டு சம்பவங்கள்
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
உடுமலை பகுதியில் பல இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து வீடு புகுந்து திருடிய குற்றவாளிகள் இன்னும் போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதை விட சம்பவம் குறித்து வெளியே தெரியாமல் மறைப்பதிலேயே போலீசார் ஆர்வம் காட்டுகின்றனர். அந்தவகையில் உடுமலையில் முக்கிய சாலையான கல்பனா சாலையில் கேரளாவைச் சேர்ந்த சிபு ஜோஸ் என்பவர் பல ஆண்டுகளாக ஸ்டுடியோ நடத்தி வருகிறார். அந்த கட்டிடத்திலேயே அவருடைய வீடும் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு அவருடைய வீட்டின் முன் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதிகாலை நேரத்தில் 2 மர்ம ஆசாமிகள் அவருடைய வீட்டு வளாகத்துக்குள் புகுந்து மோட்டார் சைக்கிளை தள்ளிச் செல்வது கண்காணிப்புக்கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் அதே இரவில் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள அப்பாவு வீதியில் சீனு என்பவர் வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர். இதற்கு சில நாட்களுக்கு முன் காந்திநகரிலுள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ரோந்துப் பணிகள்
பொதுவாக நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணிக்கு இடையிலான, மக்கள் அசந்து தூங்கும் நேரத்திலேயே திருடர்கள் கைவரிசை காட்டுகின்றனர். அந்த நேரத்தில் போலீசாரும் ரோந்துப் பணியை கிட்டத்தட்ட முடித்து விட்டு ஓய்வெடுக்கத் தொடங்கி விடுகின்றனர். இது திருடர்களுக்கு சாதகமாக மாறி விடுகிறது. உடுமலை பகுதியில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே போலீசார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் ஒரு பகுதிக்கு போலீசார் ரோந்து முடித்துச் சென்று விட்டால் மீண்டும் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கை திருடர்களுக்கு ஏற்படாத வண்ணம் ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கு திடீர் விசிட் செய்ய வேண்டும்.மேலும் இரவு ரோந்துப்பணியின் போது சைரன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அத்துடன் வீடுகள் மற்றும் வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் மூலம் பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
----