கோடை வெப்பத்தை தணித்த பலத்த மழை

Update: 2023-04-23 15:52 GMT


உடுமலை,தளியில் நேற்று கொட்டி தீர்த்த பலத்த மழையால் கோடை வெப்பம் தணிந்து உள்ளது. இதனால் பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோடை வெயில்

உடுமலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகளும், வெப்பத்தை தணிக்க முடியாமல் பொதுமக்களும் போராடி வந்தனர். அதைத் தொடர்ந்து பழச்சாறுகள், தர்பூசணி, நுங்கு உள்ளிட்டவற்றை சாப்பிட்டும், குளிர்சாதனங்களை பயன்படுத்தியும் பொதுமக்கள் உடல் வெப்பத்தை தணிப்பதற்கு முயற்சித்து வந்தனர்.

ஆனாலும் உடல் உஷ்ணம் குறைந்த பாடில்லை.இந்த நிலையில் உடுமலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்வதற்கு உண்டான சூழல் நிலவி வந்தது. இதனால் பல்வேறு தரப்பினரும் மழைப்பொழிவை எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

பலத்த காற்றுடன் மழை

இந்த சூழலில் நேற்று மதியம் 2.45 மணியளவில் வானம் இருள் சூழ்ந்து திடீரென மழை பெய்தது. மெல்ல மெல்ல மழை தீவிரமடைந்து 4 மணியளவில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.மழைநீர் வடிகால் பராமரிப்பில் அலட்சியம் காட்டப்பட்டதால் கால்வாயில் தண்ணீர் சொல்லாமல் சாலையில் செல்லும் சூழல் ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆங்காங்கே மழைநீர் வடிகால் சீரமைப்புபணி என்று பதாகை வைக்கப்பட்டு பணியும் தொடங்கப்பட்டது. ஆனால் அது முழுமை பெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக கால்வாயில் மண்தேங்கி இருந்ததால் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

விவசாயிகள் மகிழ்ச்சி

தென்மேற்கு பருவமழைக்கு முன்பு உடுமலை நகரில் மழை நீர்வடிகால் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் எழுந்து உள்ளது. திடீரென பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து சில்லென்ற காற்றுடன் கூடிய இதமான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதேபோன்று தளி பகுதியிலும் சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தண்ணீர் பற்றாக்குறையால் கருகும் நிலையில் இருந்த பயிர்கள் காப்பாற்றப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்