தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல உடுமலை வழியாக மதுரை, திருச்செந்தூர் சென்ற ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில்
பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் தினமும் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டே உள்ளது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உடுமலையில் அதிகம் உள்ளனர். அவர்கள் பண்டிகைகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் புறப்பட்டு செல்கின்றனர். அதனால் பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
பயணிகள் கூட்டம்
நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து உடுமலை வழியாக மதுரைக்கு சென்ற அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில், பாலக்காட்டில் இருந்து உடுமலை, மதுரை வழியாக திருச்செந்தூர் சென்ற ரெயில் மற்றும ்கோவையில் இருந்து மதுரைக்கு சென்ற ரெயில் ஆகிய ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்த ரெயில்களில் இடம்பிடிக்க பயணிகள் அலைமோதினர். ரெயில் உடுமலைக்கு வந்த போதே, அதில் பயணிகள் உட்கார இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே வந்தனர்.
அத்துடன் உடுமலையில் இருந்து ரெயிலில் புறப்பட்ட பயணிகளும் நின்று கொண்டே சென்றனர்.