கழிவுநீர் கால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-08-31 16:51 GMT


உடுமலை நகராட்சி பகுதியில் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் குவிந்துகிடக்கிறது. நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் துர்நாற்றம் வீசுகிறது.

தூர் வாரவில்லை

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வணிக நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீரை கொண்டு செல்லும் வகையிலும் மற்றும் மழைநீர் செல்வதற்கு ஏதுவாகவும் கால்வாய்கள் அமைக்கப்பட்டது. பாதாள சாக்கடை திட்டத்திற்கு பின்பு அவற்றை முறையாக தூர்வாரி பராமரிப்பு செய்வதற்கு முன் வரவில்லை.

இதனால் அவை மண் நிறைந்த காணப்படுவதுடன் ஆங்காங்கே தண்ணீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள்,குப்பைகள் தேங்கியும் வருகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடும் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்கின்ற பொதுமக்களும், அங்கு கடைகள் அமைத்துள்ள உரிமையாளர்களும், அதில் பணிபுரியும் பணியாளர்களும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

தேங்கியுள்ள குப்பைகள்

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

சுற்றுப்புற சுகாதாரத்தோடு உடல் நலனை காப்பதில் கழிவுநீர் கால்வாய்களின் பங்கு முக்கியமானதாகும். இதனால் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதற்கு ஏதுவாக ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் கால்வாய்கள் கட்டப்பட்டு உள்ளது. அவற்றில் முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்படாமல் சேதமடைந்து உள்ளது. இதனால் மண் தேங்கி வருவதால் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் பிளாஸ்டிக் கழிவுகளோடு குப்பைகள் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதில் இருந்து எழுகின்ற துர்நாற்றமும் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கிறது. அத்துடன் கொசுக்கள் உற்பத்திக்கும் வழிவகை செய்து வருகிறது. அதை புதுப்பித்து சீரான முறையில் தண்ணீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் பல்வேறு தரப்பினர் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே வடகிழக்கு பருவமழைக்கு முன்பு உடுமலை நகரப் பகுதியில் தூர்வாரப்படாமல் உள்ள கழிவுநீர் கால்வாய்களை முழுமையாக தூர்வாரியும் சேதமடைந்து உள்ளதை புதுப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்