அறிவியல் களப்பயணம் சென்ற உடுமலை குட்டி விஞ்ஞானிகள்

Update: 2023-03-16 15:56 GMT


கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அறிவியல் களப் பயணமாக உடுமலையைச் சேர்ந்த குட்டி விஞ்ஞானிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அறிவியல் களப்பயணம்

உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி வாரம் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சியும் அறிவியல் திறனறிப் போட்டிகளும் தனியார் கல்லூரியில் கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. இந்த போட்டிகளில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் என சுமார் 150 மாணவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா ராக்கெட் ஏவுதல் இடமான, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அறிவியல் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். உடுமலை தமிழிசைச் சங்க துணைத்தலைவர் தமிழாசிரியர் வஞ்சிமுத்து வாழ்த்துக்களை கூறி வழியனுப்பி வைத்தார்.

சூரிய குடும்ப வரலாறு

தும்பா ராக்கெட் ஏவுதல் நிலையத்தில் உள்ள பாரம்பரிய அருங்காட்சியகத்தை மாணவர்கள் கண்டுகளித்தனர். மாணவர்களின் பல்வேறு வினாக்களுக்கு விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர். அங்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வரலாறு குறும்படமாக மாணவர்களுக்கு திரையிட்டு எடுத்துக்காட்டப்பட்டது. தொடர்ந்து கேரள மாநிலத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள '3டி' கோளரங்கத்தில் மாணவர்கள் சூரிய குடும்பத்தின் வரலாறு பற்றிய குறும்படத்தை பார்த்து மகிழ்ந்தனர். முதல் முறையாக கோளரங்கம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு வருவதால் மாணவர்கள் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் ஒவ்வொன்றையும் ரசித்தனர். மேலும் இந்திய விஞ்ஞானிகளின் சாதனைகளை அறிந்து வியந்தனர். விஞ்ஞானிகளாக மாறுவதற்கு இது போன்ற களப்பயணங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மாணவர்கள் தெரிவித்தனர். விக்ரம் சாராபாய் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் முதுநிலை விஞ்ஞானி ராஜசேகர், விஞ்ஞானி சசிகுமார் ஆகியோர் நேரடியாக வந்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

மேலும் செய்திகள்