சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்தில் எந்த தவறும் இல்லை-கே.எஸ்.அழகிரி திட்டவட்டம்

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்தில் எந்த தவறும் இல்லை என்று கே.எஸ்.அழகிரி திட்டவட்டமாக கூறினார்.

Update: 2023-09-05 19:00 GMT

"சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்தில் எந்த தவறும் இல்லை" என்று கே.எஸ்.அழகிரி திட்டவட்டமாக கூறினார்.

வ.உ.சி. பிறந்தநாள் விழா

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி நெல்லையில் உள்ள மணிமண்டபத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க.வில் உள்ளவர்கள் சுதந்திர போராட்டத்தில் ஒரு ஜீவன் கூட பங்கேற்கவில்லை. சுதந்திர போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்தவர்கள் அவர்கள். காங்கிரஸ், பொதுவுடமை கட்சிகள், திராவிட இயக்கங்கள் மட்டுமே சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தன.

சனாதனத்தின் கொடூரம்

உத்தரபிரதேச சாமியார் கூறிய கருத்து சனாதனத்தின் கொடூரத்தை காட்டுகிறது. ஒரு கருத்தை சொன்னால் தலையை எடுத்து விடுவேன் என்று சொல்லும் அவர்களை விட மிகப்பெரிய வன்முறைவாதிகள் கிடையாது.

கருத்து சொன்னாலே தலை போய்விடும் என்றால், தேசத்தில் ஜனநாயகம் எங்கு உள்ளது. அந்த தேசத்தை ஆளும் கட்சி, எவ்வளவு பெரிய சர்வாதிகார கட்சி.

எந்த தவறும் இல்லை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை. அவர் புதிதாக எந்த தகவலையும் சொல்லவில்லை. 100 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் சொன்னதையே அவர் தற்போது சொல்லி உள்ளார். உதயநிதி ஸ்டாலினை இளம் பெரியார் என்று சொல்லலாம். அவரது கருத்தை தான் அவர் சொல்லி இருக்கிறார். சனாதனம் கூடாது என்றால் இந்து மதத்துக்கு விரோதம் என்று ஏன் நினைக்கிறார்கள்.

சனாதனத்துக்கு எதிராக பேசினால் இந்து மதத்துக்கு எதிராக பேசுவதாக எப்படி சொல்ல முடியும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. உதயநிதி ஸ்டாலின் கருத்தை கேட்டு இந்து அறநிலையத்துறையை மூடநம்பிக்கை இல்லாத துறையாக அமைச்சர் சேகர்பாபு மாற்ற வேண்டும். சனாதன ஒழிப்பு மாநாட்டில் அவர் கலந்து கொண்டது தவறு கிடையாது. அவரை நீக்க வேண்டிய அவசியமும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட தலைவர்கள் கே.பி.கே.ஜெயக்குமார், சங்கரபாண்டியன், மாவட்ட பொருளாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்